Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

23 April 2021

மதுரையில் பழைய சோற்றுக்கு கிடைக்கும் அமோக வரவேற்பு விற்பனை உயர்வு - காணொளி

PLAY VIDEO👇
 


அறுபது வயதைக் கடந்த பிறகும், திடகாத்திரமாக இருக்கும் கிராமத்துப் பெரியவர் யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்... `உங்கள் ஆரோக்கியத்துக்குக் காரணம் என்ன?’ என்று. சட்டென்று `பழைய சோறு, கம்பங் களிதான்... வேற என்ன? என்று பதில் சொல்வார். பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்துக்குப் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூறு ஆண்டுகளாக பழைய சோறு சாப்பிட்டுவந்த பழக்கம், நம் பாரம்பர்யத்துக்கு உண்டு. சமீபத்தில், அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (American Nutirition Association,) பழைய சோற்றின் பெருமைகளையும் பலன்களையும் பட்டியலிட்டிருந்தது. அதன்பிறகு விழித்துக்கொண்ட இன்றைய தலைமுறை, கூகுளில் பழைய சாதத்தைத் தேட ஆரம்பித்திருக்கிறது.

`பழைய சாதம்’, `பழைய சோறு’, `பழஞ்சோறு’, `ஏழைகளின் உணவு’ `ஐஸ் பிரியாணி’... என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த உணவு, அமெரிக்கர்களுக்கும் பிற நாட்டினருக்கும் வேண்டுமானால் அதிசயமாக இருக்கலாம். நம் முன்னோர்களுக்கு அன்றாடம் பார்த்துப் பார்த்துப் பழகிப்போன இதம் தரும் காலை உணவு. `மதியம் வடித்து, மீந்துபோன சாதத்தில் நீர் ஊற்றிவிடுவார்கள்.

 அடுத்த நாள் அது பழைய சாதமாகிவிடும்’ என்று இதன் எளிய செய்முறையை விளக்கலாம்தான். `இதுகூடத் தெரியாதா எங்களுக்கு?’ என்று சிலர் கோபப்படவும்கூடும். ஆனால், எதைச் சொன்னாலும் செய்முறை விளக்கம் கேட்கும் இளைய தலைமுறைக்கு, பீட்சா, பர்கரிலேயே காலம் தள்ளிக்கொண்டிருக்கும் இளைய பட்டாளத்துக்காகவாவது இதைச் சொல்லித்தான் ஆகவேண்டியிருக்கிறது. பழைய சோறு கிடக்கட்டும்... சோற்றை ஊறவைத்திருக்கும் தண்ணீர் அத்தனை ருசியானது; எத்தனையோ மருத்துவக் குணங்களைக்கொண்டது.

கிராமங்களில், வெயிலில் வாடி வதங்கி வருபவர்கள், உரிமையோடு கேட்கும் பானம் அது! `கொஞ்சம் நீச்சத்தண்ணி இருந்தா குடு தாயி...’ என்பார்கள். நீச்சத்தண்ணி என்றால், `பழைய சோற்றுத் தண்ணீர்’, `நீராகாரம்’ என்று அர்த்தம். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; குளிர்ச்சியோடு, எனர்ஜியையும் சேர்த்துத் தரும் அற்புத ஆகாரம்தான், நீராகாரம். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு அறிமுகமான காபி, நீராகாரத்தை மெள்ள மெள்ள ஓரங்கட்டிவிட்டது. அதோடு, இந்தப் பழைய சோற்றுத் தண்ணீர், மற்ற பானங்கள்போல அல்ல. பழச்சாறுகள், இளநீர், டீயைப்போல இதை பாட்டிலில் அடைத்துக் கையோடு எடுத்துப்போக முடியாது. சாதம் கலந்திருக்கும் என்பதால், புட்டிகள் ஏற்றவை அல்ல. இதுவும் தமிழர்கள் நீராகரத்தை மறந்துபோக ஒரு காரணம்.

தனியாக ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரூட்டவேண்டியதில்லை என்பது இதன் சிறப்பு. அடுக்களையில் ஓர் ஓரமாக பாத்திரத்தில் வைத்து மூடி வைத்தாலே போதும். காலையில், குளிரக் குளிர பழைய சோறு தயார். மண் பாத்திரத்தில் வைத்திருப்பது கூடுதல் சிறப்பு. தமிழகத்தில் மட்டும் அல்ல கேரளாவிலும் பாரம்பர்யம் மிக்க உணவு இது. தொட்டுக்கொள்ள ஒரு வெங்காயம், பச்சைமிளகாய் அல்லது ஊறுகாய் போதும்.

பழைய சோற்றில் லேசாக புளிப்புச் சுவை ஏற்படக் காரணமும் உண்டு. சாதத்தில் உருவாகும் லேக்டிக் ஆசிட் பாக்டீரியாதான் (Lactic Acid Bacteria) புளிப்புச் சுவையைத் தருகிறது. அதோடு, மிக அதிக அளவில் புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவற்றை அள்ளி அள்ளித் தருகிறது இந்த அட்டகாசமான சாதம். உதாரணத்துக்கு ஒரே ஒரு விஷயம்... வடித்த சாதத்தில் 3.4 மி.கி இரும்புச்சத்து இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதுவே, பழைய சாதமாகும்போது, இரும்புச்சத்தின் அளவு 73.91 மி.கிராமாக இருக்கும். ஆக, காலையில் சாப்பிட ஏற்ற சத்தான உணவு பழைய சோறு.

அதே நேரத்தில், எல்லா உணவுக்கும் ஓர் கால அளவு உண்டு... இல்லையா? அது, பழைய சோற்றுக்கும் பொருந்தும். `அதிகபட்சம் பழைய சாதம் ஆக வேண்டும் என்பதற்காக, நீரூற்றிய 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிடுவதுதான் ஆரோக்கியம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். பழைய சாதம் சாப்பிட்டால் தூக்கம் வரும், உடல்பருமன் உண்டாகும் என்பதெல்லாம் உண்மையல்ல; இது, எல்லா உணவுகளுக்குமே பொருந்தக்கூடியது. சர்க்கரைநோயாளிகள் மட்டும் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு அளவோடு சாப்பிடலாம்.

அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் பட்டியலிட்டிருக்கும் பழைய சோற்றின் நன்மைகள்...

* உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் இதில் இருக்கின்றன.

* காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும்.

* இந்த உணவு, நார்ச்சத்து தன்மையையும் கொண்டிருப்பதால், மலச்சிக்கலை நீக்கும்; உடல் சோர்வை விரட்டும்.

* ரத்த அழுத்தம் சீராகும்; உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணியச்செய்யும்.

* முழு நாளைக்கும் நம்மை ஃப்ரெஷ்ஷாக உணரவைக்கும்.

* ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வுதரும்.

* எல்லாவிதமான வயிற்றுப் புண்களுக்கும் பழைய சோறு வரப்பிரசாதம்.

* புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும்.

* வனப்பைத் தரும்; இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க உதவும்.
பழைய சோறு இருக்கும் இடம், ஆரோக்கியம் குடியிருக்கும் இடம். தமிழர் பாரம்பர்யம் ஆரோக்கியத்தைப் போற்றிப் பாதுகாத்துவந்தது என்பதை நிரூபிக்கும் மற்றுமோர் ஆதாரம், பழைய சோறு. பாரம்பர்யத்தைப் போற்றுவோம்

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES