தேர்தல் பணியில், 4.66 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசார், ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு, மூன்று கட்டமாக, அந்தந்த தொகுதிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல் பயிற்சி வகுப்பு, கடந்த மாதம், 18ம் தேதி நடந்தது.அன்று, பயிற்சி வகுப்புக்கு வந்தவர்கள் அனைவருக்கும், தபால் ஓட்டு பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டது. அவர்களுக்கு ஓட்டு உள்ள சட்டசபை தொகுதியில், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், தபால் ஓட்டு பெற, படிவம், '12 ஏ' வழங்கப்பட்டது.
வேறு சட்டசபை தொகுதியில், தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு, படிவம் - 12 வழங்கப்பட்டது. அதை பூர்த்தி செய்து கொடுத்தவர்களுக்கு, இரண்டாவது பயிற்சி வகுப்பில், தபால் ஓட்டு வழங்கப்பட்டது.அந்த வகையில், மார்ச், 31 வரை, 3.46 லட்சம் பேருக்கு, தபால் ஓட்டு வினியோகிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலானோருக்கு, தபால் ஓட்டு பெறுவதற்கான விண்ணப்பப் படிவமே வழங்கப்படவில்லை என, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.சென்னை, திருவான்மியூரில் பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்களுக்கு, இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு, விருகம்பாக்கத்தில் நடந்தது.
முதல் பயிற்சி வகுப்பில், தபால் ஓட்டு பெறுவதற்கான விண்ணப்பப் படிவம், பெரும்பாலானோருக்கு வழங்கப்படவில்லை. இரண்டாம் பயிற்சி வகுப்பில், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம், தபால் ஓட்டுக்கான விண்ணப்பப் படிவம் கிடைக்காதது குறித்து முறையிட்டபோது, அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை.நாளை, மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது. இதுவரை, தபால் ஓட்டுக்கான விண்ணப்பப் படிவம் கொடுக்காதவர்கள், ஓட்டளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பப் படிவம் கொடுக்காதவர்களுக்கு, நாளை விண்ணப்பப் படிவம் கொடுத்து, தபால் ஓட்டு வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
source-https://www.dinamalar.com/
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE