Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

11 April 2021

தமிழகத்தில் கட்டாய ஓய்வுக்குப் பரிந்துரைக்கப்பட்ட 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் - தகவல் ஆணைய உத்தரவு சொல்வது என்ன?

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பல்வேறு காலகட்டங்களில் பொறுப்பில் இருந்த 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது கடும் குற்றச்சாட்டுகளை மாநில தகவல் ஆணையம் வைத்துள்ளது. இவர்களைக் கட்டாய விருப்ப ஓய்வில் அனுப்புமாறும் தலைமைச் செயலருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் என்ன நடந்தது?

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. ஆசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடம் உள்பட பல்வேறு தேர்வுகளை இந்த வாரியம் நடத்தி வருகிறது. இதன்மூலம் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், தாங்கள் எழுதிய சரியான விடைகளை எல்லாம் தவறு எனக் குறிப்பிட்டதாகக் கூறி கௌதமன், லட்சுமி காந்தன், தாமோதரன், அசோக்குமார், சிமியோன் ஆகியோர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பொதுத் தகவல் அலுவலரிடம் முறையீடு செய்திருந்தனர். `இதில் நியாயம் கிடைக்கவில்லை' எனக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் தொடர் விசாரணைகளை நடத்திய மாநில தகவல் ஆணையம், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அலட்சியம் குறித்தும் தேர்வில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படாதது குறித்தும் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. கூடவே, தேர்வு வாரியத்தின் தலைமைப் பொறுப்புகளில் கடந்த 10 ஆண்டுகளாக இருந்த அதிகாரிகளையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மாநில தகவல் ஆணையத்தின் இந்தக் கண்டிப்பு, கல்வித்துறை வட்டாரத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

தகவல் ஆணைய உத்தரவில் என்ன உள்ளது?

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் சு.முத்துராஜ், கடந்த மார்ச் 25 ஆம் தேதி வெளியிட்ட உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாவது:

`இவ்வழக்குகளைத் தாக்கல் செய்துள்ள மனுதாரர்கள் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் பணிகளுக்காக பல்வேறு காலகட்டங்களில் நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்றவர்கள் ஆவர். ஆனால் தேர்வுகளின் முடிவில் மனுதாரர்கள் சரியாக விடை அளித்த போதிலும் சில வினாக்களுக்கான விடைகளை `தவறான விடைகள்' எனக் கூறி குறைவான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும்

ஆனால், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்களின் அடிப்படையில்தான் மனுதாரர்கள் விடைகள் அளித்துள்ளதாகவும், இருப்பினும் தங்களுக்கு அதற்காக மதிப்பெண்கள் வழங்கப்படாததால் ஆசிரியர்கள் அல்லது உதவிப் பேராசிரியர்கள் பணிகளுக்கு தாங்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றும் இவ்வாணையத்தால் நடத்தப்பட்ட வெவ்வேறு விசாரணைகளின்போது மனுதாரர்களால் தெரிவிக்கப்பட்டது. எனவே, தவறு என்று கூறும் வினாக்களுக்கான விடைகளை தேர்ந்தெடுத்த புத்தகங்களின் விவரங்களை தகவல்களாக வழங்கக் கோரி தகவல் உரிமைச் சட்டம் 2005-ன்கீழ் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்' எனக் குறிப்பிட்டுவிட்டு சில கேள்வி, பதில்களையும் பட்டியலிட்டுள்ளார்.

11 பேருக்கு மட்டும் ஏன் அரசுப் பணி?

தொடர்ந்து, `ஆசிரியர் தேர்வு வாரியம் தவறு என்று கூறியிருக்கும் தன்னுடைய விடைகளை எல்லாம் அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களில் இருந்து எழுதியுள்ளதாகவும் அவற்றுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படாததால் தன்னுடைய எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என்றும் மனுதாரர் குறிப்பிடுகிறார். ஆசிரியர் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு எந்தெந்த புத்தகங்களைப் படிக்க வேண்டும் எனத் தெளிவுபடுத்தினால் எதிர்காலத்துக்குப் பயனுள்ளதாக இருக்கும்' எனவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட PG TRB வேதியியல் பாடத்தில் கேட்கப்பட்ட தவறான வினாக்களுக்கு 11 நபர்களால் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டதால், `அந்த 11 நபர்களுக்கு மட்டும் பணி வழங்க வேண்டும்' என நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் அந்த 11 பேருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டது. தவறான வினாக்கள் எனக் கூறும்போது தேர்வு எழுதிய அனைவருக்கும் மதிப்பெண் வழங்காமல் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு மட்டும் மதிப்பெண் வழங்கப்பட்டது. எனவே, தானும் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக மனுதாரர் தெரிவித்தார்.

தொடர்ந்து தவறுகள் ஏன்?

மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு எழுதியதாகவும் அந்தத் தேர்வில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்த விடைக் குறிப்பு தவறு என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் மூலம் நிரூபிக்கப்பட்டதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார். இதுதவிர, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட முடிவுகள் மற்றும் விடைக் குறிப்புகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 12 வழக்குகள் குறித்தும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தகவல் ஆணையர் முத்துராஜ் வெளியிட்ட உத்தரவில், `ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் முதல் தலைவர் வரையில் அனைவருமே யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி, தேர்வு வாரியம் போன்றவற்றால் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றுகிறவர்கள்தான். ஆனால், ஒவ்வொரு தேர்விலும் தொடர்ந்து தவறுகள் நடைபெற்று வருகின்றன.

இந்திய அரசுச் சட்டம் 1919படி, மிக முக்கியமாக இந்தியர்களிடம் சில பொறுப்புகளை ஒப்படைக்கும் நடவடிக்கையைத் தொடங்கிய பிரிட்டிஷ் அரசாங்கம், அரசுப் பணிகளுக்கு ஆள்களைத் தேர்வு செய்வதற்கு தேர்வாணையங்களைத்தான் முதலில் உருவாக்கினார்கள். அப்படி, அரசு உருவாவதற்கு முன்பே தேர்வாணையங்கள் உருவாகின. சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவதற்காகவே ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அரசு பொறுப்பை ஒப்படைக்கிறது. ஒரு குழந்தையை பெற்றெடுக்க தாய் எவ்வளவு கவனமாக இருக்கிறாரோ, அதே அளவு கவனத்துடன் தேர்வு வாரியம் செயல்பட்டிருக்க வேண்டும். இதனால் சிறந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. இதனால் அரசாங்கத்துக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது' என அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக, தமிழக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சனுக்கு சில பரிந்துரைகளை தகவல் ஆணையர் தெரிவித்துள்ளார். அந்தப் பரிந்துரையில், `தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன்படி பொறுப்புடைமை, ஊழல் இல்லாத நிர்வாகத்தை உறுதிப்படுத்தத் தவறிய, பொதுமக்களுக்கு தகவல் பெறும் உரிமையை முறையாக வழங்காத பொது அதிகார அமைப்புகளின் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்ய தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

செயல்படாத அலைபேசிகள்

மேலும், ` ஆசிரியர் தேர்வு வாரியத்தைத் தொடர்பு கொள்ள இரண்டு அலைபேசி எண்களும் ஒரு தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த எண்கள் எப்பொழுதுமே வேலை செய்வதில்லை. ஆசிரியர் தேர்வு வாரிய ஊழியர்களிடம் எந்தத் தகவலைக் கோரினாலும், `இணையத்தளத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்' என்ற தகவல் மட்டுமே தரப்படுகிறது.

தேர்வு முடிவுகளில் தவறு இருப்பின் திருத்தம் செய்வதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அதிகாரம் இருந்தும் பல போட்டித் தேர்வுகளில் கொடுக்கப்பட்ட வினாக்கள் தவறு என்றும் விடைக் குறிப்புகள் தவறு என்றும் தேர்வர்கள் வாரியத் தலைவருக்கு தெரிவித்த பின்னரும் சட்டப்படி கிடைக்க வேண்டிய நிவாரணங்களை வழங்கவில்லை.

9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் யார் யார்?


தனியார் பணி என்பது மற்றொரு மனிதனின் தேவைகளை நிறைவேற்றுவது, அரசுப் பணி என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் தம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள உரிமையை வழங்குவது. இந்த உரிமையை வழங்குவதற்கு அரசுப் பணியைச் செய்கிறோம் என்ற பொறுப்புடைமை இல்லாமல் செயல்பட்ட காரணத்தாலும் பல போட்டித் தேர்வுகளில் தவறு நடந்திருந்தும் அத்தவறு மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளத் தவறிய காரணத்தாலும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் தேர்வுகளை நடத்தி முடித்து முழுமையான பணி நியமனத்தை முடிக்க முடியாத அதிகாரிகள், அனுபவம் இல்லாத மற்ற அரசுப் பணிகளைச் செய்வது மற்றும் மற்ற பொது அதிகார அமைப்புகளை சிறப்பாக நிர்வாகம் செய்வது கடினம்.

எனவே, மேற்கண்ட இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளின் பணிப் பதிவேடுகளில் பொறுப்டைமை மற்றும் வெளிப்படைத்தன்மையோடு செய்ய வேண்டிய பணிகளைச் செய்யவில்லை என்று பதிவு செய்து அவர்களின் பணிவிதிகளின் ஒழுங்கு நடவடிக்கையாக கட்டாய ஓய்வில் அனுப்புவதற்குரிய சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ள தலைமைச் செயலருக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

இந்தப் பட்டியலில் ஜூன் 2011 முதல் அக்டோபர் 2020 வரையில் பதவியில் இருந்த 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அதில், சுர்ஜித் கே சவுத்ரி, விபு நாயர், காகர்லா உஷா, ,ஜெகந்நாதன், சீனிவாசன், நந்தகுமார், ஜெயந்தி, வெங்கடேஷ், லதா ஆகிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களில் சுர்ஜித் சவுத்ரி, விபு நாயர் ஆகியோர் தவிர்த்து மற்ற 7 பேரும் அரசுப் பணியில் உள்ளனர்.

தவறு அரசின் மீதா? அதிகாரிகள் மீதா?

`தகவல் ஆணையத்தின் உத்தரவு சரிதானா?' என ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கோ.பாலச்சந்திரனிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். ``

அதிகாரிகள் தங்கள் பணிகளைச் சரியாக செய்யாவிட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க முடியும். அதேநேரம், பணி நீக்கம் செய்வது என்பது உச்சகட்டமான ஒரு நடவடிக்கை. அதற்கு தகவல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்த உத்தரவில் சீரியல் எண் 2 மற்றும் சீரியல் எண் 9 ஆகியவற்றைத் தவிர, வேறு எந்த அதிகாரியும் அங்கு நிலையான கால அளவில் பணியாற்றவில்லை. சுர்ஜித் சவுத்ரி 3 மாதங்களும் இன்னொரு அதிகாரி 2 மாதங்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணிபுரிந்திருக்கிறார். ஓர் அதிகாரிக்கு நிலையான கால அளவு கொடுத்து வேலை வாங்காத பொறுப்பின்மையோடு அரசுதான் செயல்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்திருப்பது என்பது சரியான ஒன்றாக இல்லை" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` இதே வாரியத்தில் 4 ஆண்டுகள் வேலை பார்த்த அதிகாரியும் இருக்கிறார். அவரிடம் கேள்வியெழுப்புவது சரியானதாக இருக்கும். ஒரு சில மாதங்கள் பணியில் இருந்த அதிகாரிகளிடம் கேள்வி கேட்பது நியாயம் இல்லை. ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான பரிந்துரையையும் நடுநிலையோடு பிறப்பித்தது போலவும் தெரியவில்லை. ஒரு குறிப்பிட்ட அதிகாரியை பதவியைவிட்டு நீக்க வேண்டும் என்றால், அவர் செய்த தவறுகள் தொடர்பான கோப்புகள் இருக்க வேண்டும். தலைமைப் பொறுப்பில் உள்ளவருக்கு பொறுப்பு அதிகம் என்பது உண்மைதான். அதேநேரம், தேர்வு வாரியத்தில் அலைபேசி எடுக்காமல் தவறு செய்த ஊழியருக்காக தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் மீது குறை சொல்ல முடியுமா.

இதுதொடர்பான புகாரை சேர்மன் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் புகார் கூறலாம். பொறுப்பில்லாமல் செயல்படுவது என்பது அரசின் அனைத்துத் துறைகளிலும் உள்ளது. தகவல் ஆணையம் இன்னும் சற்று கவனமாக கோப்புகளை ஆராய்ந்து பரிந்துரைத்திருந்தால் சரியாக இருந்திருக்கும். தேர்வு வாரியத்தில் நிலையான பதவிக்காலம் என்பது இரண்டு பேருக்கு மட்டுமே இருந்துள்ளது. அவர்களுக்கு குறிப்பிட்ட பதவிக் காலத்தைக் கொடுக்காமல் இருந்தது அரசின் குற்றம். அதைப் பற்றி ஏன் ஆணையம் பேசவில்லை?" எனக் கேள்வியெழுப்பினார்..

பிபிசி தமிழுக்காக


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES