Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

26 April 2021

கொரோனா 2வது அலை பரவலுக்கு காரணமான தேர்தல் கமிஷன் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை


தேர்தல் கமிஷனை விளாசிய சென்னை ஐகோர்ட்

சென்னை : கொரோனா 2வது அலை பரவலுக்கு காரணமான தேர்தல் கமிஷன் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை என சென்னை ஐகோர்ட் கூறியிருப்பது டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை எவ்வளவு அதி தீவிரமாக உள்ளது என்பது நாடே அறியும். குறிப்பாக வட மாநிலங்களில் இந்நோயால் பாதிக்கப்பட்டோர் மூச்சு விட முடியாமல் திணறி போய் உள்ளனர். பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் நோய் தொற்று அதிகமாகி வருகிறது. ஏற்கனவே தேர்தல் போன்ற விஷயங்களால் தான் கொரோனா தொற்று அதிகமானதாக ஒரு விமர்சனம் உள்ளது. 

இந்நிலையில் கரூரில் ஓட்டு எண்ணிக்கையின்போது கொரோனா விதிகளை பின்பற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்யக் கோரி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வில் இன்று (ஏப்.,26) விசாரணைக்கு வந்தது. அப்போது சஞ்சீப் பானர்ஜி தேர்தல் கமிஷனை கடுமையாக சாடினார். அவர் கூறியதாவது: கொரோனா 2ம் அலை பரவலுக்கு தேர்தல் கமிஷனே காரணம். 

சமூக இடைவெளியின்றி அரசியல் கட்சிகள் இஷ்டம் போல் பிரசாரம் செய்ததை தடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இன்றைக்கு உள்ள நிலைக்கு முழுமையாக தேர்தல் ஆணையமே காரணம். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நீதிமன்றம் எவ்வளவோ அறிவுறுத்தியும் நீங்கள் (தேர்தல் கமிஷன்) காதில் வாங்கவில்லை. உங்கள் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாவிட்டால் ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் என்று தேர்தல் கமிஷன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த விவகாரம் டுவிட்டரில் #MadrasHC, #MadrasHighcourt ஆகிய ஹேஷ்டாக்குகளில் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. ஐகோர்ட் நீதிபதிகளின் கருத்தை பலரும் ஆதரித்து கருத்து பதிவிட்டு வருவதோடு தேர்தல் கமிஷனையும், மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற தன்மைகளையும் சுட்டிக்காட்டி டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவான சிலரின் கருத்துக்கள்...


* இந்திய நீதித்துறை மீண்டும் உயர்ந்து நிற்கிறது.

* சென்னை ஐகோர்ட்டிற்கு சல்யூட். தேர்தல் கமிஷன் மீது கொலை குற்ற வழக்கு பதிவு செய்யலாம்.

* சரியாக சொன்னது சென்னை ஐகோர்ட். அப்படி நீதிமன்றம் இதை கூற மறுத்துவிட்டது என நினைக்கிறேன். அதாவது, முகமூடி, சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களையும் சேர்த்து தண்டிக்க வேண்டும். விதிமுறையை மதிக்காதவர்கள், விதிமுறையை மீறுபவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை தர வேண்டும்.

* கொரோனா முழுமையாக தீரவில்லை என மத்திய, மாநில அரசுகளுக்கு தெரியும். அப்படி இருக்கையில் ஏன் தேர்தலை நடத்த வேண்டும். ஐகோர்ட் கூறியது போன்று இது முழுக்க முழுக்க தேர்தல் கமிஷனும், மத்திய, மாநில அரசுகளும் மட்டுமே காரணம்.


* தேர்தல் பிரசாரங்களில் முகக்கவசத்தை மறந்த, சமூகஇடைவெளியை மறந்து, கூட்டம் கூட்டமாக மக்களை கூட விட்டு விட்டு இப்போது நாடே கொரோனாவால் அல்லோலப்பட்டு கிடக்கிறது.

* நீதித்துறைக்கு அதிகாரம் உள்ளது. தேர்தல் கமிஷன் மீதும், இதற்கு துணை போன அனைவரும் மீது வழக்கு பதிவு செய்யுங்கள்.


* தேர்தல் கமிஷனுக்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். அப்போதுதான் அவர்கள் தங்கள் அரசியலமைப்பு கடமைகளை கட்டாயமாக்கி, தேர்தல் செயல்முறைகளில் ஆட்சியை மீட்டெடுப்பார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தின் துணிச்சல்.


* இதை தான் நான் நேற்று கூறினேன். இப்போது சென்னை ஐகோர்ட்டும் அதை தான் கூறியிருக்கிறது. நிச்சயம் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.


* இப்படி ஒரு கருத்தை முன் வைத்த சென்னை, ஐகோர்ட்டிற்கு எங்களது நன்றி.


* ஐந்து மாநிலங்களில் வேண்டுமானால் கொரோனா பரவ காரணமாக தேர்தல் கமிஷன் இருந்திருக்கலாம். ஆனால் டில்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் அதிதீவிரமாக கொரோனா மாற யார் காரணம்.

* கோல்கட்டாவை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டும் கொரோனா பரவலுக்கு தேர்தல் கமிஷன் தான் காரணம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இவர்களின் கருத்து உண்மை தான்.

* ஐந்து மாநிலங்களில் நடத்தப்பட்ட தேர்தல் முடிவுகளை தற்போது அறிவிக்காமல் தள்ளி வைப்பதே நல்லது. நிச்சயம் ஓட்டு எண்ணிக்கையின் போது கூட்டம் கூடும். என்னதான் முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இவர்கள் கூறினாலும் அதை நிச்சயம் ஒழுங்காக பின்பற்ற மாட்டார்கள்







No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES