தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தேர்தல் பயிற்சி வகுப்புக்கு சென்றபோது கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு வழங்கப்பட்ட தபால் ஓட்டை வாங்காமல் திரும்பி வந்து விட்டார்.
இந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு பதிவு செய்யப்பட்ட தபால் ஓட்டு புகைப்படம் எடுக்கப்பட்டு, அது பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கலெக்டரிடம் புகார்
இதுதொடர்பாக தேர்தல் அலுவலரிடம் புகார் செய்யப்பட்டது. அந்த வாக்குச்சீட்டு ஆசிரியை சகாய ஆரோக்கிய அனுஷ்டாளுக்கு உரியது என்றும், அவர்தான் இதனை பதிவு செய்து பேஸ்புக்கில் வெளியிட்டதாக கூறி அவரை பணியிடை நீக்கம் செய்ய கல்வித்துறை பரிந்துரை செய்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியது.
ஆனால், இதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ஆசிரியை சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் கலெக்டர் சமீரனிடம் புகார் மனு கொடுத்தார். தனது வாக்குச்சீட்டை இதுவரை தான் வாங்கவில்லை எனவும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் வலியுறுத்தி இருந்தார்.
திடுக்கிடும் திருப்பம்
இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார். அதன்பேரில் தென்காசி போலீசார் நடத்திய விசாரணையில் இந்த விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டது.
அதாவது வாட்ஸ்-அப்பில் வெளியான வாக்குச்சீட்டு ஆசிரியை சகாய ஆரோக்கிய அனுஷ்டாளுக்கு உரியது இல்லை என்றும், அது சுரண்டை அருகே உள்ள வெள்ளகால் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை கிருஷ்ணவேணிக்கு உரியது என்றும் தெரியவந்தது.
3 பேர் கைது
ஆசிரியை கிருஷ்ணவேணியின் கணவர் கணேச பாண்டியன் ஒரு கட்சியில் நிர்வாகியாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அந்த கட்சிக்கு ஆசிரியை கிருஷ்ணவேணி தனது வாக்குச்சீட்டில் வாக்கை பதிவு செய்து அதை தனது சிறுவயது மகனிடம், உனது தந்தைக்கு பிடித்த கட்சிக்கு வாக்களித்து உள்ளேன் என்று கூறி உள்ளார். அதனை அவரது மகன் புகைப்படம் எடுத்து வாட்ஸ்-அப்பில் வெளியிட்டு உள்ளான்.
இதை தென்காசி கூலக்கடை பஜார் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து ஆசிரியை கிருஷ்ணவேணி, அவருடைய கணவர் கணேச பாண்டியன், செந்தில்குமார் ஆகிய 3 பேரையும் தென்காசி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
source www.dailythanthi.com
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE