Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

13 February 2021

பொதுமக்கள் தங்கள் குறைகளை இணையதளம் வாயிலாகவும்பதிவு செய்யலாம்

தமிழ்நாடு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் எல்லாக் குறைதீர்ப்பு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, குறைகள் விரைந்து களையப்படுவதைக் கண்காணிக்க முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

''தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (13.2.2021) தலைமைச் செயலகத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு தெரிவித்து, விரைந்து தீர்வு காணும் வகையில் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் உருவாக்கப்பட்ட, "முதலமைச்சரின் உதவிமையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டத்தை ((Integrated and Inclusive Public Grievance CM Helpline Management System - IIPGCMS)" தொடங்கி வைத்தார்.



தமிழக முதல்வர் கடந்த 15.9.2020 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தற்போது வெவ்வேறு அரசுத் துறைகள் தங்களுக்கென, தனித்தனியே துறைவாரியான மக்கள் குறைதீர்ப்பு மையங்கள் மற்றும் இணையதளங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகின்றன. மாவட்ட அளவில் திங்கள்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள், மாதாந்திர மனுநீதி நாள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள், அம்மா திட்ட குறைதீர்க்கும் நாள், ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் போன்றவையும், மாநில அளவில் முதலமைச்சரின் தனிப்பிரிவு, அம்மா அழைப்பு மையம் போன்ற அமைப்புகளிலும் மனுக்கள் பெறப்பட்டு, தீர்வுகள் காணப்படுகின்றன. இதனால், ஒரே நபர் பல்வேறு இடங்களில் மனுக்களை அளிக்கும் சூழல் ஏற்படுகிறது. ஒரே கோரிக்கை மனு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் வழங்கப்படுவதையும் காண முடிகிறது.

எனவே, தமிழ்நாடு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் எல்லாக் குறைதீர்ப்பு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, குறைகள் விரைந்து களையப்படுவதைக் கண்காணிக்க ஒரு சிறப்பான அமைப்பு முறை தேவைப்படுகிறது. எனவே, பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் பதிவு செய்து, அவற்றிற்குத் தீர்வு காண, ஒரு குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம் அமைப்பதன் அவசியத்தை உணர்ந்து, "முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்டகுறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம்" செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பிற்கிணங்க, தகவல் தொழில்நுட்பவியல் துறையின் மூலம் 69 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக, பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்குக் கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1100 மூலம் தெரிவிக்கும் வகையில், சென்னை, சோழிங்கநல்லூர், ராஜீவ் காந்தி சாலையில் 12 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 100 இருக்கைகளுடன் முதலமைச்சரின் உதவி அழைப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முதலமைச்சரின் உதவி அழைப்பு மையத்தை (CM Helpline Call Center) தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்தார். இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்குக் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1100 வாயிலாகத் தெரிவிக்கலாம்.

மேலும், பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு 24 மணிநேரமும் CMHelpline.tnega.org என்ற இணையதளம் வாயிலாகவும்,
cmhelpline@tn.gov.in என்று மின்னஞ்சல் வாயிலாகவும், CMHelpline Citizen என்ற கைப்பேசி செயலி வாயிலாகவும், https://twitter.com/cmhelpline_tn என்ற ட்விட்டர் பக்கம் வாயிலாகவும் https://www.facebook.com/CM-Hepline-TN என்ற பேஸ்புக் பக்கம் வாயிலாகவும் பதிவு செய்யலாம்.

இத்திட்டத்தின் மூலமாக பல்வேறு அரசுத் துறைகளுக்கான குறைகளை மனுதாரர் ஒரே தளத்தில் பதிவு செய்யலாம். இதன்மூலம் பொதுமக்களிடமிருந்து தொலைபேசி, குறைதீர்க்கும் முகாம், இணையதளம், சமூக ஊடகங்கள், கைப்பேசி செயலி, மின்னஞ்சல் மூலமாகப் பெறப்படும் மனுக்கள் மீது இத்திட்டத்தின் வாயிலாக குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்திட்டத்தில் பொதுமக்களின் குறைகளை விரைந்து களைந்திட அவர்களின் ஆதார் எண் அல்லது குடும்ப அட்டை எண்ணை அவசியம் தெரிவிக்க வேண்டும். வேலைவாய்ப்பு கோரும் மனுதாரர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு, உரிய வேலைவாய்ப்புப் பெற வழிவகை செய்யப்படும். மேலும், இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏற்பு, நிராகரிப்பு, மனுவின் தற்போதைய நிலை குறித்துக் குறுஞ்செய்தி வாயிலாக மனுதாரர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர், அரசு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசுச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களால் வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

இந்த நிகழ்ச்சியில், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், இ.ஆ.ப., தகவல் தொழில்நுட்பவியல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) ஹன்ஸ் ராஜ் வர்மா, இ.ஆ.ப., தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் ஆணையர் / முதன்மைச் செயல் அலுவலர் சந்தோஷ் கே. மிஸ்ரா, இ.ஆ.ப., முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டத்தின் சிறப்பு அலுவலர் கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்''..

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES