தங்கம் விலையை பொறுத்தவரையில் ஏறுவதும், இறங்குவதுமான நிலையற்ற சூழலில் இருக்கிறது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து உச்சத்தை நோக்கி தங்கம் விலை பயணித்து வந்தது. ஏறுமுகத்திலேயே இருந்த தங்கம் விலை, கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 328-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுதான் தங்கம் விலையில் வரலாறு காணாத உச்சமாக பார்க்கப்பட்டது
.அதன்பின்னர், விலையில் சற்று சரிவு ஏற்பட்டு, ஒவ்வொரு மாதமும் விலை குறையத் தொடங்கியது. அதனையடுத்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கிய நிலையில், கடந்த 1-ந்தேதி மத்திய அரசின் பட்ஜெட்டில், தங்கத்தின் மீதான கலால் வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு மறுநாளில் இருந்தே தங்கம் விலை மளமளவென சரிந்தது. அதனைத் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் தங்கம் விலை தற்போது இருந்து வருகிறது.
பவுனுக்கு ரூ.296 குறைவு
அந்த வகையில் தங்கம் விலை கடந்த வாரத்தில் ஒரு நாள் உயர்வதும், மறுநாளில் சரிவதுமாக இருந்தது. இந்தநிலையில் கடந்த 17-ந்தேதியில் இருந்து அதன் விலை குறைந்து கொண்டே வருகிறது. நேற்றும் சரிந்து தான் காணப்பட்டது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 385-க்கும், ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.37-ம், பவுனுக்கு ரூ.296-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 348-க்கும், ஒரு பவுன் ரூ.34 ஆயிரத்து 784-க்கும் விற்பனை ஆனது.
ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் வந்தது
கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,008 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர் சரிவின் காரணமாக தங்கம் விலை கடந்த 9 மாதங்களுக்கு பிறகு ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் வந்திருக்கிறது.
தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் குறைந்திருந்தது. நேற்று கிராமுக்கு 60 காசும், கிலோவுக்கு ரூ.600-ம் குறைந்து, ஒரு கிராம் 73 ரூபாய் 40 காசுக்கும், ஒரு கிலோ ரூ.73 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE