Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

02 February 2021

ஜாக்டோ-ஜியோ போராட்ட எச்சரிக்கை எதிரொலி: ஆசிரியர்கள் மீதான அனைத்து வழக்குகள் ரத்து: தமிழக அரசு உத்தரவு



சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 8, 9 மற்றும் 10ம் தேதிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ள நிலையில், அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாக திடீரென அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. அதன் உச்சகட்டமாக 2019ம் ஆண்டு தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்திலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பாய்ந்தது. பலர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானார்கள். இவற்றை ரத்து செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ அமைப்பு போராடி வருகிறது.

ஆனால் இந்த அரசு அதையும் கண்டுகொள்ளாததால், திருச்சியில் நேற்று முன்தினம் உயர்மட்டக் குழு கூட்டத்தை ஜாக்டோ-ஜியோ கூட்டியது. அந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களும், பள்ளிக் கல்வி அமைச்சருக்கு எதிரான கண்டன தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் தீவிரம் காட்டிய 7,898 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும், ஒழுங்கு நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும், புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜாக்ேடா-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் 20 பேர் கொண்ட குழு, 8, 9 மற்றும் 10ம் தேதிகளில், தொடர்ந்து 72 மணி நேரம் சென்னையில் உண்ணாவிரதம் இருப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அதே நாட்களில் மாலை நேரங்களில் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அந்தந்த மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்த பள்ளிக் கல்வி அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றினர். ஜாக்டோ-ஜியோவின் இந்த அறிவிப்பை அடுத்து தமிழக அரசு தற்போது அவசரம் அவசரமாக ஒரு அறிவிப்பை நேற்று வெளியிட்டது. இந்த அறிவிப்பு தேர்தலை முன்வைத்து வெளியிடப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. அந்த அறிவிப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளதாவது: ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 22.1.2019ல் கால வரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதனால் நிர்வாக கட்டுப்பாட்டை நிலை நிறுத்த 7898 அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தவிர 17686 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 408 வழக்குகள் போடப்பட்டது. அதேபோல 2338 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டு பணியிடை நீக்கப்பட்டு பின்னர் பணியமர்த்தப்பட்டனர்.

இந்த போராட்டம் குறித்து நடந்த வழக்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது தொடரப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ முன்வைத்தது. இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது நிலுவையில் உள்ளது. அரசால் எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளையும் வழக்குகளையும் திரும்பப் பெற அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் ஏற்கெனவே என்னிடம் நேரில் கோரிக்கை வைத்திருந்தனர். இன்றும்(பிப்ரவரி 1)அந்தகோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டு நிலுவையில் உள் ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் இந்த அரசு கைவிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவிப்புக்கு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் மதுரம் நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES