Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

27 January 2021

குடியரசு தின விழாவில் விருது பெற்றவர்கள்


வீரதீர செயலுக்கான விருதுகள்-பதக்கங்கள் பெற்றவர்கள், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். குடியரசு தின விழாவில் விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு



வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் -2021 (அரசு ஊழியர் பிரிவு), ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், புலிவலம் கிராமம் அரசுப் பள்ளியில் கடந்த ஆண்டு ஜனவரி 29-ந்தேதி ஆசிரியை பா.முல்லை 26 மாணவர்களுடன் நாடக ஒத்திகை நடத்திக்கொண்டிருந்தபோது, அருகில் உள்ள வீட்டில் இருந்து கியாஸ் கசிந்து வாசனை வந்ததால், ஆபத்தை உணர்ந்து மாணவர்களை அவசரமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினார் என்றாலும், கியாஸ் சிலிண்டர் வெடித்து சுவர் இடிந்து விழுந்ததில் ஆசிரியை முல்லை படுகாயமடைந்து மீண்டார். 26 மாணவர்களின் உயிரை காப்பாற்றிய அவருக்கு இந்த பதக்கம் வழங்கப்பட்டது. வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம், கால்நடை உதவி டாக்டர் எ.பிரகாஷ்க்கு வழங்கப்பட்டது. தர்மபுரி வனக்கோட்டம் எல்லகுண்டூர் கிராமத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 19-ந்தேதி, சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த யானையை அவர் காப்பாற்றியபோது, அருகில் இருந்த பொதுமக்களை தாக்க யானை முற்பட்டதால், உயிரையும் பொருட்படுத்தாமல் தனது கையாலேயே யானைக்கு மயக்க ஊசி செலுத்தினார். இதனால், யானையும், பொதுமக்களும் காப்பாற்றப்பட்டனர்.

மேலும், ரெயில் ஓட்டுனர் சுரேஷ், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந்தேதி, மதுரையில் இருந்து சென்னைக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்கியபோது, நிலச்சரிவினால் தண்டவாளத்தில் கிடந்த பாறாங்கற்களை பார்த்தவுடன், உடனடியாக அவசரகால பிரேக்கை இயக்கி ரெயிலை பாதுகாப்பாக நிறுத்தினார். இதனால், ரெயிலில் இருந்த 1,500 பயணிகள் காப்பாற்றப்பட்டனர். இதற்காக அவருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

இதேபோல், நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பகுதியில் தனியார் வாகன டிரைவரான ஆர்.புகழேந்திரன், மரம் முறிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்த காவலர் ஐ.ஜெயராமை இடர்பாடுகளுக்கு இடையே அழைத்து சென்று மருத்துவமனையில் உரிய நேரத்தில் சேர்த்து காப்பாற்றியதற்காக அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு வரும் கே.ஏ.அப்துல் ஜப்பாருக்கு இந்த ஆண்டுக்கான கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் வழங்கப்பட்டது. திருத்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைபிடித்து அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிகளுக்கான சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது விருதுநகர் மாவட்டம் வடக்கு திருவில்லிப்புத்தூர் கிராமத்தை சேர்ந்த க.செல்வகுமாருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதில் ரூ.5 லட்சம், பதக்கம் மற்றும் சான்றிதழ் இடம்பெற்றுள்ளது.

சிறந்த உழவர் உற்பத்தியாளர் குழுமங்களுக்கான விருதுகள், ஈரோடு துல்லிய பண்ணைய உற்பத்தியாளர் குழுமம், வெள்ளியங்கிாி உழவன் உற்பத்தியாளர் குழுமம், தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் குழுமம், விருதை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் குழுமம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டன. இதில், பதக்கம் மற்றும் சான்றிதழ் இடம்பெற்றுள்ளது.

காந்தியடிகள் காவலர் பதக்கம், சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உள்பட்ட புனித தோமையர் மலை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு பெண் இன்ஸ்பெக்டர் டி.மகுடீஸ்வாி, சேலம் மாவட்டம் மத்திய புலனாய்வுப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் என்.செல்வராஜூ, விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் தாலுகா போலீஸ் நிலைய ஏட்டு எஸ்.சண்முகநாதன், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கொடுங்காலூர் ஏட்டு எஸ்.ராஜசேகரன் ஆகியோருக்கு கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதற்காக வழங்கப்பட்டது.

அதேபோல், தமிழகத்தில் சிறந்த போலீஸ் நிலையங்களில் முதலிடம் பிடித்த சேலம் நகர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பா.குமார், 2-ம் இடம் பிடித்த திருவண்ணாமலை நகர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பா.சந்திரசேகரன், 3-வது இடத்தை பிடித்த சென்னை கோட்டூர்புரம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கி.அஜூகுமார் ஆகியோருக்கு பரிசுக்கோப்பைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES