வாட்ஸ்அப்பின் புதிய விதிமுறைகளை கடைப்பிடிக்க விருப்பம் இல்லையென்றால் அந்த செயலியை பயன்படுத்த வேண்டாம் என டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப்பின் புதிய பயன்பாட்டு விதிமுறைகளுக்கு எதிராக வக்கீல் சைதன்யா ரோஹில்லா தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சஞ்சீவ் சச்தேவா அமர்வு நேற்று விசாரித்தது.
மனுவை பரிசீலித்த நீதிபதி, எந்தவொரு செயலியின் கொள்கை விதிமுறைகளையும் மனுதாரர் படிக்கவில்லை என தெரிகிறது.
ஒரு செயலியை பயன்படுத்த பயனாளர் தெரிவிக்கும் ஒப்புதல் தெரிந்து கொண்டால் அதிர்ச்சிதான் ஏற்படும். செயலி பயன்பாட்டுக்கு அளிக்கப்படும் ஒப்புதல் அனைத்தும் தானாக முன்வந்து அளிப்பவை. இதுபோன்ற ஒப்புதலை வாட்ஸ்அப்புக்கு அளிக்க விருப்பமில்லை என்றால், அந்த செயலியை பயன்படுத்த வேண்டாம். வேறொரு செயலியை பயன்படுத்துங்கள். இந்த அடிப்படை புரிதல் கிடைக்கும் வரை பதில் அளிக்க உத்தரவிட முடியாது என்றார்.
மனுதாரர் சார்பில் வக்கீல் மனோகர் லால் ஆஜராகி, ‘பயனாளர்களிடம் பெறப்படும், பயனாளர்கள் இணையத்தில் தேடும் தகவல்களையும், தரவுகளையும் உலகம் முழுவதும் வாட்ஸ்அப் பகிர உள்ளது. வாட்ஸ்அப்பின் புதிய விதிமுறை கொள்கையை ஏற்கவும், மறுக்கவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது’ என்றார். இதற்கு நீதிபதி, ‘அனைத்து செயலிகளும் இதைத்தானே செய்கின்றன. வாட்ஸ்அப்பின் புதிய விதிமுறை கொள்கையை மறுக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றால், அந்த செயலியை பயன்படுத்த வேண்டாம்’ என்றார்.
இந்த மனு தொடர்பாக நீதிபதி எழுப்பிய கேள்விக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மா, ‘ஆராய வேண்டியுள்ளது’ என பதில் அளித்தார்.
வாட்ஸ்அப், பேஸ்புக் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் முகுல் ரோத்தகி, கபில் சிபல் ஆகியோர், ‘வாட்ஸ்அப் செயலி பாதுகாப்பானது. மனுதாரரின் உரையாடல்களும் பாதுகாப்பாகவே இருக்கும்’ என வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி சஞ்சீவ் சச்தேவா வழக்கு விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE