கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
மத்திய அரசு வழிகாட்டுதலின்படி பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஏற்கனவே அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை இறுதியாண்டு வகுப்புகளும், ஆராய்ச்சி படிப்புகளும் கடந்த மாதம் (டிசம்பர்) 17-ந் தேதி முதல் செயல்படத் தொடங்கின.
இந்தநிலையில் தற்போது 9 மாதங்களுக்கு பிறகு அனைத்துக் கல்லூரிகளையும் திறந்து வகுப்புகள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரக இயக்குனர் யாசம் லஷ்மி நாராயண ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் உத்தரவின் படி புதுவையில் நாளை (புதன்கிழமை) முதல் அனைத்து உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி கல்லூரிகளில் அனைத்து வகுப்புகளும் திறக்கப்படும்.
இதைத்தொடர்ந்து கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிவது அவசியம். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கல்லூரி வகுப்புகள் 6 நாட்கள் நடத்தப்படும்.
ஒரு நேரத்தில் 50 சதவீத மாணவர்களை மட்டுமே வகுப்பறையில் அனுமதிக்க வேண்டும். மாணவர்களை 2 பிரிவுகளாக பிரித்து ஒரு நாள் விட்டு, ஒருநாள் கல்லூரிக்கு வர அனுமதிக்க வேண்டும். கல்லூரிக்கு வரும் போது மாணவர்களுக்கு வெப்ப பரிசோதனை நடத்த வேண்டும். அடிக்கடி கல்லூரிகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் உயர்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE