Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

22 January 2021

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்கமுடியாது-ஐகோர்ட்டில், மத்திய அரசு பதில்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு தாக்கல்  செய்துள்ளது

.

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அமைச்சரவை முடிவு செய்து, அம்மாநில கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த கோப்புகளை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கவர்னர் அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில், புதுச்சேரியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவரின் தாயார் மகாலட்சுமி, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான புதுச்சேரி அரசின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் புதுச்சேரி அரசின் முடிவு தொடர்பான கோப்புகள் உள்துறை அமைச்சகத்தின் பரீசீலனையில் உள்ளது. இது முக்கியமான விவகாரம் என்பதாலும், புதுச்சேரி முதல்-அமைச்சருக்கும், கவர்னருக்கும் மாறுபட்ட கருத்து இருப்பதாலும், இந்த இடஒதுக்கீடு குறித்து மத்திய குடும்ப நல அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சி துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. அந்த துறைகளின் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு, ஒரே தகுதி என்ற அடிப்படையில் மருத்துவ படிப்புகளில் தரவரிசை அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கையை ஊக்கப்படுத்த கடந்த 2016-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் ‘நீட்' தேர்வு கொண்டு வரப்பட்டது.

அரசு பள்ளியில் படித்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இட ஒதுக்கீடு வழங்கினால், அது கல்வித்தரத்தை பாதிக்கும். இதேபோல தமிழக அரசும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. ஆனால், அந்த விவகாரம் மத்திய அரசு கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை.

இதுபோன்ற இடஒதுக்கீட்டை பிற மாநிலங்களிலும் கொண்டு வர முற்படும். இதனால் தகுதியானவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் என்ற சீர்திருத்தமுறை சிதைக்கப்படும். எனவே, இந்த விவகாரத்தில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய 6 வாரம் அவகாசம் வேண்டும்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், ‘‘இந்த கல்வியாண்டில் புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வாய்ப்பு குறைவு. எனவே, விரிவான பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.

மாணவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் வில்சன், ‘‘இந்த இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்காமல் மத்திய அரசு காலம் கடத்தி வருவது, மாணவர்களின் மருத்துவ கனவை பாதிக்கும். மாநில அரசின் முடிவுக்கு எதிராக, மத்திய அரசு செயல்படுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இதுபோன்ற இடஒதுக்கீட்டை அமல்படுத்த மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது’’ என்று வாதிட்டார்.

இதையடுத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு 4 வாரத்தில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை அடுத்த மாதம் (பிப்ரவரி) 25-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES