தமிழகத்தில் கடந்த 10 மாதங்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கரோனா பரவல் சற்று தணிந்துள்ள நிலையில், மாணவர்களின் உயர்கல்வியை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது.
இதையடுத்து, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள தேர்வுத் துறைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணை விவரம்:
உரிய விதிகளைப் பின்பற்றி 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி, தேர்வு எழுத உள்ளவர்களின் பெயர்பட்டியலை தயாரிக்கும் பணிகளை தொடங்கலாம். மாணவரின் பெயர்,பிறந்த தேதி, புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் தேர்வுக்கான கட்டணங்களை பெறுவதற்காக மாணவர்களை பள்ளிக்கு நேரில் வரவழைக்கலாம்.
எனினும், கூட்டம் சேராத வகையில் மாணவர்களை தனித்தனியாக வரவழைத்து இப்பணிகளை செய்ய வேண்டும். அதிகபட்சம் ஒரு மணி நேரத்துக்கு 20 மாணவர்களை மட்டுமே வரவழைக்க வேண்டும். கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிப்பவர் அல்லது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வேறொரு நாளில் அவகாசம் வழங்க வேண்டும்.
இதுதவிர, பொதுத் தேர்வு தொடர்பாக, மாணவர்கள், ஆசிரியர்களிடம் உறுதிமொழி படிவம்பெறவேண்டி உள்ளது. உரிய விதிகளைப் பின்பற்றி இப்பணிகளை மேற்கொள்ளவும் தேர்வு துறைக்கு அரசு அனுமதி அளிக்கிறது. தனிநபர் இடைவெளி, முகக் கவசம்அணிதல் உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE