சென்னை:அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு ஒன்றரை மாதங்களாக 'ஆன்லைன்' பாடங்களும் நடத்தப்படாததால் மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
கொரோனா பிரச்னை காரணமாக பள்ளி கல்லுாரிகள் ஒன்பது மாதங்களாக செயல்பட வில்லை. கல்லுாரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் டிச. முதல் கல்லுாரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடக்கின்றன.மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன.
இதில் டிச.ல் நடத்த வேண்டிய செமஸ்டர் தேர்வு மார்ச்சுக்கு தள்ளி வைக்கப்பட்டது.ஆகஸ்டில் துவங்கிய ஆன்லைன் வகுப்புகள் நவ. 15 வரை நடத்தப்பட்டன. அதன்பின் ஒன்றரை மாதங்களாக வகுப்புகள் நடத்தப்படவில்லை.குறிப்பாக அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள தன்னாட்சி அல்லாத கல்லுாரிகளில் மூன்று மற்றும் ஐந்தாம் செமஸ்டர் மாணவர்களுக்கு ஒட்டு மொத்தமாக வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுவரை 69 சதவீத பாடங்கள் தான் நடத்தப்பட்டுள்ளன.
இது குறித்து மாணவர்கள் கூறியதாவது: அண்ணா பல்கலை சார்பில் இரண்டு மாதங்களாக உரிய வழிகாட்டுதல் இல்லாததால் ஆன்லைன் பாடங்கள் நடத்தப்படவில்லை என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.அதேபோல் செய்முறை பயிற்சிக்கான வகுப்புகள் நடத்துவது குறித்தும் அண்ணா பல்கலை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே வரும் தேர்வுகளில் நாங்கள் மிக குறைந்த மதிப்பெண் மட்டுமே பெற முடியும்; வேலைவாய்ப்பை இழக்கும் அபாயமும் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறின
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE