தமிழகத்தில் ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ள நிலையில், பிப்ரவரி 1ம் தேதி முதல் 9, 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா தொற்றின் விளைவாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மறுஅறிவிப்பு வரும் வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டது. பின்னர் பாதிப்பு எண்ணிக்கை குறைந்த காரணத்தால் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து, அது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகள் இறுதி முடிவுகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தமிழகத்தில் 300 நாட்களுக்கு பின்னர் ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.
முதற்கட்டமாக பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் 9, 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் பிப்ரவரி 1ம் தேதி முதல் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியது. இதற்கு பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் அவர்கள் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் வாரத்தில் 6 நாட்கள் பள்ளி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
1000 பேர் 10 மற்றும் 12ம் வகுப்பில் பயிலும் பள்ளிகளில் மாணவர்கள் வகுப்பறைக்கு 25 பேர் வீதம் 40 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் காற்றோட்டமான சூழலில் மாணவர்கள் பயில ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது 10, 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரும் நிலையில் இட நெருக்கடி ஏற்படுகிறது.
இதனால் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை. கொரோனா தொற்று முழுவதுமாக கட்டுக்குள் வரும் வரை இதற்கு வாய்ப்பு கிடையாது என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE