தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
மாநில மையம்
பொதுச் செயலாளரின் கடிதம்,நாள்:08.01.2021
பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்.
🛡️"அக்கினி குஞ்சொன்று கண்டேன்-அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்- வெந்து தணிந்தது காடு" என்ற மகாகவியின் பாடல் வரிகளுக்கு வடிவமாக TNPTF என்ற அக்கினிக்குஞ்சு நாளை பற்றவைக்கும் போராட்ட நெருப்பு "தர்ணா போராட்டம்" என்கிற வடிவில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை (09.01.2021) நடைபெற உள்ளது.
🛡️15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாளை மாவட்டத் தலைநகரங்களில் நடத்தவுள்ள தர்ணா போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒவ்வொரு வட்டார,நகர,மாநகர, மாவட்ட,மாநிலப் பொறுப்பாளர்களும் கண் துஞ்சாது களப்பணி ஆற்ற வேண்டியது இயக்க கடமையாகும்.
🛡️சமீபகாலமாக வட்டார அளவில் அல்லது மாவட்ட அளவில் நமது இயக்கம் சார்பில் நடைபெறும் போராட்டங்களை ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் ஆசிரியர்களைக் கொண்டு நடத்தினால் போதும் என்ற எண்ணம் ஒரு சில பொறுப்பாளர்களி டத்தில் உள்ளதை ஒரு சில இடங்களில் காணமுடிகிறது. அப்படிப்பட்ட எண்ணம் போராட்டக் கனலைக் குறைத்து விடும் என்பதை சம்பந்தப்பட்ட தோழர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
🛡️போராட்டக் களத்திற்கு எண்ணிக்கை வரம்பு என்பது தேவையில்லை. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீரத்துடன் தனியே நெஞ்சுறுதியோடு அநீதிக்கு எதிராகப் போராடுகிறது என்கிற செய்தி தமிழ்நாட்டின் அனைத்து ஆசிரியர்களையும் சென்றடைய வேண்டும். அதற்கேற்ப களப்பணிகள் அமைய வேண்டும்.எவ்வளவு ஆசிரியர்களை அணி திரட்ட முடியுமோ அவ்வளவு ஆசிரியர்களைத் திரட்ட வேண்டும்.
நாம் முன்வைத்துள்ள 15 அம்ச கோரிக்கைகள் என்பது வெற்றுக் கோரிக்கைகள் அல்ல.
அனைத்துக் கோரிக்கைகளும் பறிக்கப்பட்ட நம் உரிமைகளை உள்ளடக்கியவை.
பல ஆண்டுகாலம் போராடிப் பெற்ற உரிமைகளைத் தாங்கி நிற்பவை.
ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் மீதான தமிழக அரசின் கொடூரத் தாக்குதலின் கோரமுகத்தை வெளிக்காட்டுபவை
15 அம்சக் கோரிக்கைகளும் ஏதாவது ஒருவகையில் தமிழ்நாட்டின் அனைத்து ஆசிரியர்களோடும் நெருக்கமான தொடர்புடையவை
ஆசிரியர் நலன் மட்டுமல்லாது மாணவர் நலன்,கல்வி நலன்,சமூக நலன் தாங்கி நிற்பவை.
நம் எதிர்கால வாழ்வாதாரத்தை உயர்த்திப் பிடிப்பவை
🛡️எனவே,யாருக்காகவோ நடக்கும் போராட்டம் என்று உணர்வுள்ள எந்த ஆசிரியராலும் ஒதுங்கி நிற்க முடியாது.இனி பறிப்பதற்கு எதுவும் இல்லை என்று எண்ணும் அளவிற்கு தமிழக அரசு உரிமைப் பறிப்பை ஒவ்வொன்றாய் நடத்திக்கொண்டிருக்கிறது.இனியும் வேடிக்கை பார்த்தால் விபரீதமாகிவிடும்.
🛡️2021ல் உரிமைப் பறிப்பிற்கெதிரான முதல் போராட்டத்தை நம் பேரியக்கம் முன்னெடுத்தி ருக்கிறது.நம் போராட்டக் கனல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிய நிலையில் ஒருசில ஆசிரியர் அமைப்புகளும்,அரசு ஊழியர் அமைப்புகளும் போர்க்குரலை வெளியிட்டுள்ளன.
🛡️ஜாக்டோ-ஜியோ பேரமைப்புக் கூட நேற்று (07.01.2021) சென்னையில் கூடி போராட்டத் திட்டங்களை விவாதித்துள்ளது.21.01.2021 அன்று திருச்சியில் மாநில உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இவைகளெல்லாம் நம் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகக் கருதலாம்.
🛡️சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையிலும் கூட தமிழக அரசு நம் கோரிக்கைகள் மீது அலட்சியம் காட்டுவதும், ஒழுங்கு நடவடிக்கைகளைக்கூட திரும்பப்பெற மறுப்பதும் தமிழ்நாட்டு ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் சமூகத்திற்கு மிகப்பெரிய அதிருப்தியைக் கொடுத்துள்ளது என்றால் அது மிகையாகாது.
🛡️இந்நிலையில் ஜனநாயக ரீதியிலான நம் தர்ணாப் போராட்டத்தை எவ்வாறாயினும் தடுத்திடவும்,தகர்த்தி டவும் கல்வித் துறையும், காவல் துறையும் செய்யும் முயற்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கின்றன. எத்தகைய போராட்டத்தையும் இடர்களைத் தாண்டி, தடைகளை உடைத்து வெற்றிகரமாக நடத்தும் செயல்திறன்மிக்க நம் பேரியக்கத் தோழர்கள் இப்போராட்டத்தையும் இணையற்ற எழுச்சியோடு நடத்திக் காட்டுவார்கள்.
🛡️நாளை நடைபெறும் மாவட்டத் தலைநகர் தர்ணாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பலநூறு ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்.மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றார்கள் என்ற செய்தி தமிழக அரசின் செவிப்பறைகளை எட்டவேண்டும்.இந்த "ஆட்சியில் போராடி பயனில்லை"என்று எந்த ஆட்சியிலும் போராடாமல் உரிமைகளைக் காவு கொடுத்துவிட்டு வீர வசனம் பேசும் சங்கத்தலைமைகள் இனியேனும் களத்திற்கு வரவேண்டும்.எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அநீதிக்கு எதிராகப் போராடுகிற புடம் போட்ட தங்கம் நம் சங்கம் என்பதை நிரூபிக்கிற போராட்டம் தான் நாளைய தர்ணாப் போராட்டம்.
🛡️ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதற்காக 5,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் மீதான 17(ஆ)நடவடிக்கைகள் என்பதும்,குற்றவியல் நடவடிக்கைகள் என்பதும் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்.அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.அதற்காக எத்தகைய தியாகத்தையும் புரிந்திட மாவட்டத் தலைநகரங்களில் நாளை தீரத்துடன் சங்கமிப்போம்!
உரிமைக் குரலை ஓங்கி ஒலித்திடுவோம்!
🤝புரட்சிகர போராட்ட வாழ்த்துக்களுடன்
ச.மயில்
பொதுச் செயலாளர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி...
kalvitamilnadu.com
🔖டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். நன்றி
JOIN OUR
>"Kindly share to all"<
அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை kalvitamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் ,உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்....
Teachers can send their Materials to kalvitamilnadu@gmail.com [or] Whatsapp – 9444555775
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE