பாட்டுக்கனல் பாரதி
முக்காடு போட்டலைவோர் மத்தியில் முண்டாசுக்கட்டிக் கொண்ட தமிழ்ப்பூக்காடு நீ
நோக்காடு பட்டுக்கிடந்த தேசத்தின் துயரடைக்க மிடுக்கோடு மீசை முறுக்கிய கோட்டுக்காரன் நீ
உன்னிடம் வந்துதான் தமிழெனும் ஆம்பல் சோம்பல் முறித்தது
உன் வரிகள் யாவுமே குத்தீட்டி
இன்றளவும் வைத்திருக்கிறாய் கூர்த்தீட்டி
மதியாரிடத்து தவழ்ந்திடாத ரோஷக்காரன்
குடிபெருமை தூக்கியெறிந்து புதுமை தரித்த வேஷக்காரன்
குருவியும் குயிலுங்கூட சக உயிரி என்றாய்
சமத்துவம் பேசிப்பேசி மனிதம் வென்றாய்
காய்ந்த வயிறானாய் உலவினாலும்
உணவில்லையென சோர்ந்தவனுக்கும் கொடிபிடித்த சொந்தக்காரன்
மூடமதி திருத்த ரௌத்திரம் கொண்டு வலம் வந்த சந்தக்காரன்
நீ புதுக்கவிதையின் ஊற்று
மடமைகளுக்கு உன்னெழுத்தே கூற்று
நீ காணிநிலக்கனவின் ஞானி
தமிழ்சாறெடுத்து பாப்புணைந்த தேனீ
மீளவோர் பிறப்பிருப்பின் விரைந்தே வா நீ
நாடிருக்குது நலமற்றுக் கோணி
தமிழ்ச்சாட்டையெடுத்து
நாட்டைச் செம்மைப்படுத்த வா பாரதி
இதுவரை இல்லவே இல்லை தமிழ்ப்பரிதி உனக்கோர் மாற்றுப்பிரதி
சீனி.தனஞ்செழியன்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE