கொரோனா பாதித்த நோயாளிகளின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டக் கூடாது: மத்திய, மாநில அரசுகளுக்கு தடை
கொரோனா பாதித்தவர்களின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கொரோனா பாதித்தவர்கள் வீட்டில், எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘கொரோனா நோயாளிகளின் வீடுகளுக்கு வெளியே நோட்டீஸ் ஒட்டுவது அவர்களின் அந்தரங்கம், வாழும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்துக்கு எதிரானது. இதற்கு தடை விதிக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.
இதற்கு பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, “கொரோனா பாதித்தவர்களின் வீடுகளின் வெளியே நோட்டீஸ் ஒட்டும்படி மத்திய அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை,’ என கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை கடந்த 1ம் தேதி ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி அசோக் பூஷன் அமர்வு நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், “கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதிக்கிறது. அதற்கான அவசியம் கிடையாது. ஒருவேளை வீட்டின் உரிமையாளர் விருப்பப்பட்டால் அதனை ஒட்டுவதற்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. இதில் தன்னிச்சையாக அரசுகள் தரப்பில் அதுபோன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது. இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவின் அறிக்கை மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பிவைக்கப்படும்,’ என தெரிவித்தது. மேலும், இது தொடர்பான வழக்குகளையும் முடித்து வைத்தது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE