Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

15 December 2020

உயர் படிப்புகளுக்கான பயிற்சி மையங்களை ஏற்படுத்த முன்வர வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்





மருத்துவம், பொறியியல் தவிர்த்த பிற உயர் படிப்புகளுக்கான பயிற்சி மையங்களை ஏற்படுத்த அரசும், அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நீட், ஜெஇஇ தேர்வுக்கு பயிற்சி வழங்க ஏராளமான பயிற்சி மையங்கள் உள்ளன. இது தவிர்த்து சட்டம், கல்வியியல், கணக்குத் தணிக்கை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் உள்ளன.

இப்படிப்புகளில் சேர தேசியளவில் நுழைவுத் தேர்வுகள் நடைபெறுகின்றன. ஆனால் இந்த தேர்வில் பங்கேற்க மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க மையங்கள் இல்லை.


எனவே தமிழகத்தில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உயர் படிப்புகளுக்கான தேசிய நுழைவு தேர்வு மையங்கள் அமைக்கவும், மருத்துவம், பொறியியல் தவிர்த்து பிற துறைகளின் நடைபெறும் தேர்வுகள், உயர்க் கல்வி விவரங்கள், அதற்கான கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்புகள் விவரங்களை மாணவர்களுக்குத் தெரிவிக்க முகாம்கள், இணைய வழியிலான ஒருங்கிணைப்பு மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தமிழக மாணவர்களுக்கு பல துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. தமிழக அரசின் வேலைகளுக்கு தமிழத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிப்பது இல்லை. பள்ளிக் காலங்களிலேயே மாணவர்கள் கஞ்சாவுக்கும், மதுவிற்கும் அடிமையாகின்றனர். பல்வேறு துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள், அதற்கு தேவையான பயிற்சிகள் வழங்குவதும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியமாகிறது.


முன்பு ஐஏஎஸ் அதிகாரிகளில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். தற்போது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் ஐஏஎஸ் தேர்வுக்கு விண்ணப்பிப்பது இல்லை. எனவே அரசு மட்டுமின்றி, அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் மாணவர்களுக்குத் தேவையான பயிற்சி மையங்கள் அமைக்கலாம்.

வாக்குக்காக மட்டுமல்லாமல் வருங்கால தலைமுறையினர் உயர் படிப்புகளுக்கு செல்வதற்கும், உயர் வேலை வாய்ப்புகளை பெறவும் தகுதியானவர்களாக உருவாக்கும் பணியிலும் கட்சிகள் ஈடுபட வேண்டும். மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES