பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை என்று கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதனை தடுக்க சட்டப்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் குற்றங்கள் குறையவில்லை.
இந்த நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை என்று கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் மோகனா சாஜன். சென்னையில் உள்ள கல்லூரியில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். அவர் சென்னையில் தங்கியிருக்கும் கேரள பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தினார்.
இதற்காக அவர் சென்னையில் தங்கி படிக்கும் கேரள மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களை சந்தித்து கருத்து கேட்டு தனது ஆய்வு முடிவில் பதிவு செய்துள்ளார். மாணவி நடத்திய அந்த ஆய்வின் முடிவை ஐ.ஐ.டி. பாம்போ என்ற நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
பெண்களை மதிப்பதும், பாதுகாப்பதும் சென்னை நகரை போன்று வேறு எந்த நகரமும் இல்லை. அதே போல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிக குறைந்த நகரம். இரவு 7 மணி போல்தான், இரவு 10 மணியும் உள்ளது. எந்த நேரத்திலும் இங்கு பெண்கள் நடமாடலாம்.
சென்னையில் தங்கி வேலை செய்யும் மலையாள பெண்கள் வேலை காரணமாக இரவு 10 முதல் 11 மணி ஆனாலும் ரெயில், பஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களிலோ அல்லது நடந்தோ தைரியமாக வீடுகளுக்கு வரலாம். பஸ் மற்றும் ரெயில் பயணங்களில் ஆண்களால் இதுவரை வேதனை அடைந்தது இல்லை.
சிலர் கிண்டல் செய்வது போல் பார்ப்பார்கள். இருந்தாலும் நமது பார்வை சரியாக இருந்தால் அப்படி பார்ப்பவர்களும் கூட ஒதுங்கி சென்றுவிடுவார்கள். பஸ் பயணத்தில் இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்திருந்தால், பெண்கள் வந்தால் எழுந்து சென்று அமர இடம் கொடுக்கிறார்கள்.
உடல்களில் யாராவது கை வைப்பதோ, தவறாக பேசியதோ இதுவரை எங்களுக்கு நடக்கவில்லை. கேரளாவை விட சென்னை 100 சதவீதம் பாதுகாப்பாக உள்ளது. அதேபோல் சென்னையில் உள்ளவர்களை பார்த்து மரியாதை கொடுப்பதையும் கற்றுக்கொள்ளலாம்.
இங்கு உள்ளவர்கள் வயது வித்தியாசம் பார்க்காமல் வாங்கள், போங்கள் என்றுதான் பேசுவார்கள். ஆனால் எங்கு பார்த்தாலும் சத்தமாகத்தான் இருக்கும். டீ கடை, பெட்டிக்கடை, சந்தை என எங்கு பார்த்தாலும் பெண்கள் சத்தமாகவும், சந்தோஷமாகவும் பேசுவார்கள். வசதி இல்லாதவர்களும் இங்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள்.
மேற்கண்ட தகவல்கள் அதில் கூறப்பட்டுள்ளன.
தனது ஆய்வு குறித்து மாணவி மோகனா சாஜன் கூறியிருப்பதாவது:-
தமிழ் மக்களிடம் மிகவும் சந்தோசமான மனநிலை உள்ளது. அவர்கள் கோபத்தை மனதில் வைத்திருக்கமாட்டார்கள். பேச வேண்டியதை உடனே பேசி தீர்ப்பார்கள். ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பாக உள்ளேன் என்பதை விட வேறு ஒன்றும் தேவை இல்லை. அது சென்னை பெண்களிடம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் பணிபுரியும் கேரளாவை சேர்ந்த ஆசிரியை மேரி குட்டி பிரான்சிஸ் கூறியதாவது:-
ஆண்களுக்கு இணையாக மரியாதை, உரிமையை பெண்களுக்கு கொடுப்பது சென்னையை போல் வேறு எங்கும் இல்லை. ரெயில் மற்றும் பஸ்களில் பெண்களை கண்டால் ஆண்கள் எழுந்து செல்கிறார்கள். நான் பாதுகாப்பாக இல்லை என்றும், ஆண்களால் பாதிக்கப்பட்டேன் எனவும் சென்னையில் ஒரு பெண்கூட கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:-
தன்னம்பிக்கையும், திறமையும்தான் பெண்களின் பாதுகாப்பு. மக்கள் நீதி மய்யத்தில் மாதர் மய்யப்படை என்ற பிரிவு உள்ளது. அதில் ஏராளமான பெண்கள் உள்ளனர். அவர்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். பெண்களுக்கு பொறுப்பு கொடுப்பது மட்டுமல்ல, பெண்களை பாதுகாப்பதும் ஒவ்வொரு கட்சியினரின் கடமை.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE