பிழையான வங்கிக் கணக்கு விவரங்களால் நிதிப் பரிமாற்றத்தில் இடையூறு ஏற்படுவதாக, எம்.ஃபில்., பிஎச்.டி. ஆய்வாளர்களின் பல்கலைக்கழக மானியக்குழு விளக்கம் அளித்தது.
புதுடெல்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) 13 திட்டங்களின் கீழ், நிதியுதவி மற்றும் உதவித்தொகை வழங்கி வருகிறது. இதன்படி ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு முதுநிலைப் பட்டப்படிப்புக்கான இந்திரா காந்தி உதவித்தொகை, முதுநிலைப் படிப்புக்கான பல்கலைக்கழக ரேங்க் பெற்ற மாணவர்களுக்கான உதவித்தொகை, அறிவியல் மற்றும் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான ஆராய்ச்சி உதவித்தொகை, அறிவியல், மருத்துவம் மற்றும் பொறியியல் ஆய்வாளர்களுக்கான டாக்டர் கோதாரி முதுமுனைவர் ஆராய்ச்சி உதவித்தொகை, கலை மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கான டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் முதுமுனைவர் ஆராய்ச்சி உதவித்தொகை, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின ஆய்வாளர்களுக்கான ராஜீவ்காந்தி தேசிய நிதியுதவி, சிறுபான்மையினருக்கு மவுலானா ஆஸாத் நிதியுதவி உள்ளிட்ட திட்டங்களின் கீழ் முதுநிலைப் பட்டப்படிப்பு, எம்ஃபில்., பிஎச்.டி. போஸ்ட் பிஎச்.டி. படிப்புகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இதற்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் வங்கிக் கணக்கு எண், ஆதார் எண் மற்றும் யுஜிசி அனெக்சரில் உள்ள சான்றிதழ்களில் நெறியாளர், துறைத் தலைவர் மற்றும் முதல்வரிடம் கையொப்பம் பெற்ற சான்றிதழை மாதந்தோறும், அவர்கள் படிக்கும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நியமிக்கப்பட்டுள்ள யுஜிசி நிதியுதவி பொறுப்பாளர்கள் (நோடல் ஆபீசர்ஸ்) மூலமாக யுஜிசி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பின்னர் மாணவர்களின் வங்கிக் கணக்குக்கு உதவித்தொகை மற்றும் நிதி அனுப்பப்படும். இந்நிலையில் இந்த நிதியுதவி மற்றும் உதவித்தொகை பெறுவதில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக தொடர்ச்சியாகப் புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இதுகுறித்துப் பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதியுதவி பெறும் கோவையைச் சேர்ந்த எம்.ஃபில்., பிஎச்.டி. ஆய்வாளர்கள் சிலர் கூறும்போது, ''எம்.ஃபில்., பிஎச்.டி. ஆய்வாளர்கள் மேற்கொள்ளும் ஆய்வின் அடிப்படையில், ஆய்வுத் திட்டங்கள் மற்றும் பிற தகுதிகளின் அடிப்படையிலும் நிதியுதவி மற்றும் உதவித்தொகைக்கு யுஜிசி மூலமாகத் தேர்வு செய்யப்படுகிறோம். ஆனால், அந்த நிதியுதவியைப் பெறுவதில் பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்திக்கிறோம். சிலருக்கு இத்தொகை கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
தகுதி பெற்ற நாளில் இருந்தும், பல மாதங்களாகவும், இடையிடையே சில மாதங்களும் நிதியுதவி கிடைப்பதில்லை. யுஜிசியைத் தொலைபேசி மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்புகொண்டு விளக்கம் பெற முடிவதில்லை. மற்ற ஆய்வாளர்களுக்குத் தொடர்ச்சியாக நிதி விடுவிக்கப்படுவதில்லை. இப்பிரச்சினைகளை விரைவாகக் களைந்து நிதியை விடுவிக்க யுஜிசி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
நீண்டகாலமாகத் தொடர்ந்து இப்பிரச்சினை குறித்து ஆய்வாளர்கள் எழுப்பி வரும் புகாருக்குப் பல்கலைக்கழக மானியக்குழு அளித்துள்ள விளக்கத்தில், ''ஆய்வாளர்கள், மாணவர்களுக்கு நிதி விடுவிக்கும்போது, பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்குக்குச் செல்வதில்லை. வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்கள் தவறாக இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது ஆவணங்களின் உள்ள மாணவர்களின் பெயரும், வங்கிக் கணக்கு விவரத்தில் உள்ள மாணவர்களின் பெயரும் பொருந்தாமை, வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படாமை, தவறான வங்கிக் கணக்கு எண், தவறான வங்கியின் ஐஎஃப்சி எண், இருவர் பயன்படுத்தும் வங்கிக் கணக்கு, பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்கு உள்ளிட்ட காரணங்களால் நிதியுதவிப் பரிமாற்றத்தில் தடை ஏற்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “ஆய்வாளர்கள் இப்பிரச்சினைகளைத் தவிர்க்கும் வகையில் அவர்கள் அளித்த ஆவணங்கள் அடிப்படையில், சரியான வங்கிக் கணக்கு எண் விவரத்தை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதுபோன்ற சிக்கல்கள் உள்ளவர்கள் அதன் விவரத்தை, தங்களுடைய யுஜிசி நிதியுதவி திட்டப் பொறுப்பாளர்கள் மூலமாக வரும் டிச.10-ம் தேதிக்குள் nspugc1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்றும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE