
பள்ளிக் கல்வித்துறை
சென்னை:
தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி இப்போதே முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தேர்தல் எந்த தேதியில் நடத்தப்படும் என்ற அறிவிப்பு மார்ச் முதல் வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை நடத்துவதற்கும், ஓட்டு பெட்டிகளை பாதுகாப்பாக வைத்து எண்ணுவதற்கும் பள்ளி, கல்லூரி கட்டிடங்கள்தான் முழுமையாக பயன்படுத்தப்படுகின்றன.
இந்த சூழலில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளன.
பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாவிட்டாலும் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் வருகிற 16-ந் தேதி பள்ளி, கல்லூரிகளை திறக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்தது.
ஆனால் கொரோனா பரவல் முற்றிலும் குறையாத நிலையில் மீண்டும் கொரோனா அதிகரித்துவிடும் என கூறி பள்ளி, கல்லூரிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அரசுக்கு கோரிக்கை வைத்தன.
பெற்றோர், ஆசிரியர் சங்கத்தினரும் இந்த மாதம் பள்ளியை திறக்க வேண்டாம் என்று பல இடங்களில் கோரிக்கை வைத்தனர். இதனால் ஒவ்வொரு பள்ளிக் கூடத்திலும் கருத்துக் கேட்பு கூட்டம் கடந்த 9-ந் தேதி தலைமை ஆசிரியர்களால் நடத்தப்பட்டது.
இதில் பலதரப்பட்ட கருத்துகளை பெற்றோர்கள் முன்வைத்தனர். சிலர் பள்ளிக் கூடத்தை திறக்க வேண்டும் என்றனர். சில பெற்றோர் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளை மட்டும் திறக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர். பெற்றோர்கள் சொன்ன கருத்துகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன் மீது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்தி அதிகாரிகள் மற்றும் சுகாரத்துறையினருடன் கலந்து பேசி முடிவெடுக்க உள்ளார்.
காலாண்டு தேர்வு நடத்தப்படாத சூழலில் தற்போது டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால் போதிய கால இடைவெளி இல்லாத காரணத்தால் 40 சதவீத பாடங்களை குறைத்து நேராக முழு ஆண்டு தேர்வு எழுதும் வகையில் பாடங்கள் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிற மார்ச் மாதத்துக்குள் பள்ளி, கல்லூரிகளுக்கான இறுதித் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், அதற்கேற்ப பாடங்களை விரைந்து நடத்தி தேர்வுக்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் இப்போதே திட்டமிட்டு வருகிறார்கள்.
பள்ளி, கல்லூரிகள் திறக்கும் தேதி எப்போது என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரியவரும் என்பதால், எந்தெந்த தேதிகளில் பரீட்சை நடைபெறும் என்ற அட்டவணையும் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE