நிவர் புயல் எதிரொலியாக எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் தேர்வுகள் டிசம்பர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயலால் மிக பலத்த காற்றுடன், கனமழை பெய்யும் என்றும், சென்னை மற்றும் புறநகரில் கனமழை மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, புயலை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு விரைவாக மேற்கொண்டு வருகிறது.
அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்து மக்கள் வேறு இடங்களுக்குப் பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே நிவர் புயல் எதிரொலியாக எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் தேர்வுகள் டிசம்பர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''புயல் எதிரொலியாகவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை முன்னிட்டும் நவம்பர் 25, 26, 27ஆம் தேதிகளில் நடைபெற இருந்த எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகள் முறையே டிசம்பர் 15, 17, 19ஆம் தேதிகளில் நடைபெறும்.
அதேபோல நவம்பர் 25, 26ஆம் தேதிகளில் நடைபெற இருந்த எம்.எஸ்சி. நர்ஸிங் படிப்புகளுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இவை டிசம்பர் 2, 3 ஆம் தேதிகளில் நடைபெறும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக பல்வேறு தேர்வுகளும், கலந்தாய்வும் ஒத்தி வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE