நிவர் புயலால் திருச்சி மாவட்டத்துக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் ஆட்சியர் சு.சிவராசு கூறியதாவது:
''மழையால் பாதிக்கப்படும் மக்களைத் தங்கவைக்க போதிய இடங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படாது. 2 மணி நேரத்தில் 80 மி.மீ. அளவுக்கு மழை பெய்தால், வெள்ளம் தேங்கித் தண்ணீர் வடியக் காலதாமதம் ஆகும் சூழல்தான் நமக்கு ஏற்படும்.
காவிரியில் 60,000 கன அடி வரை தண்ணீரை வெளியேற்ற முடியும். ஆனால், இப்போது 1,000 கன அடி மட்டுமே தண்ணீர் செல்கிறது. மேலும், திருச்சி மாவட்டத்தில் 7 கால்வாய்களில் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது. எனவே, எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீரை ஆறு உள்வாங்கக்கூடிய திறன் உள்ளது.
காற்று வீசும் நேரத்தில் மின் நிறுத்தம் செய்யப்படும். மக்கள் கூரை, ஓடு வேயப்பட்ட வீடுகளில் இல்லாமல் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல வேண்டும். குழந்தைகள் உட்பட யாரும் காற்று பலமாக வீசும்போது வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். மரத்தடியில் நிற்கக் கூடாது. கால்நடைகளையும் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். மழை முடிந்த பிறகும் 2 நாட்களுக்குக் குடிநீரைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும்.
கடலோர மாவட்டங்களைவிடத் திருச்சி மாவட்டத்தில் காற்று மெதுவாக வீசும். ஆனால், மழைப்பொழிவு இருக்கும். திருச்சி மாவட்டத்தில் மழை பாதிப்புகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படக்கூடிய 154 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில், காவிரிக் கரையையொட்டி அமைந்துள்ள 17 இடங்களில் அதிக பாதிப்பு நேரிடலாம். திருச்சி மாவட்டத்தில் ஏரி, குளங்கள் 35 சதவீதம் நிறைந்துள்ளன. அவை டிச.1-ம் தேதிக்கு முன் 50 சதவீதம் நிரம்பிவிடும்.
திருச்சி மாவட்டத்தில் நகராட்சி, மாநகராட்சி ஆகிய பகுதிகளில் புயல், வெள்ள பாதிப்புகளைக் கண்காணிக்கவும், உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்''.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE