மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் என உயிர் காக்கும் துறைகளில் பணிபுரிவோருக்குச் சங்கம் வேண்டாம் என உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த முகமது யுனீஸ்ராஜா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ''24 மணி நேரமும் பணிபுரியும் மருத்துவர்களை விடச் சில துறைகளில் 3 மணி நேரம் மட்டும் பணிபுரிபவர்களுக்குக் கூடுதல் ஊதியம் வழங்கப்படுகிறது. கரோனா காலத்தில் மருத்துவர்களின் சேவை பாராட்டுக்குரியது.
தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் மருத்துவப் படிப்பு என்று வரும்போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரவே விரும்புகின்றனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து வசதிகளும் இருப்பதே இதற்குக் காரணம். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் போன்ற உயிர் காக்கும் துறைகளில் பணிபுரிபவர்களுக்குச் சங்கம் என்பது தேவையில்லை'' எனக் கருத்துத் தெரிவித்தனர்.
பின்னர், தமிழகத்தில் மருத்துவர்களுக்கான காலிப் பணியிடங்கள் எத்தனை உள்ளன? நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் போதுமான மருத்துவர்கள் உள்ளார்களா? என்பன குறித்துத் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவ.30ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE