
அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று கடலூரில் பேசிய முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். நிவர் புயல் நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை கரையைக் கடந்தது. புயல் கரையை கடந்த போது பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
புயலின் தாக்கத்தினால் கடலூர் மாவட்டம் கடுமையாக சேதமடைந்துள்ளது. பல பகுதிகள் தனி தீவுகளாக மாறியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் வாழை உள்ளிட்ட ஏராளமான பயிர்கள் மோசமாக சேதமடைந்துள்ளன. மனம்பாடி என்ற கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் நெல் பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. கடலூர் மாவட்டம், ரெட்டி சாவடி குமாரமங்கலத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விளைநிலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.
புயலால் சேதமடைந்த வாழைத்தோப்புகளை பார்வையிட்டார். மேலும் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். தேவனாம்பட்டினம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் புயல் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு செய்த முதல்வர், மருத்துவ வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்த விவசாயிகள் இழப்புக்கு உரிய நிவாரணம் பெற முடியும். அரசு ஊழியர்கள் உயிரைப் பணயம் வைத்து இரவு பகல் பாராமல் பணியாற்றுவதை பாராட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் ஏற்படும் என வானிலை மையம் கூறியிருந்தது. அதனால் துரிதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்தோம்.
கடலூர் மாவட்டத்தில் புயலால் விழுந்த 321 மரங்கள் அகற்றப்பட்டு விட்டன. அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சரியாக எடுத்ததால் புயலால் பெரிய பாதிப்பு இல்லை என்று கூறினார். புயல், மழை வெள்ளத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. உயிரிழப்பை தவிர்க்கவே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மழைநீர் முழுவதும் அகற்றப்பட்ட பிறகே மின் விநியோகம் தொடங்கப்படும்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE