கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் பரிகம் எனும் கிராமத்தில் இயங்கி வந்த அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளியில் 80 மாணவர்கள் வரை பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் கட்டிடம் திடீரென புதுப் பொலிவுடன் பல வண்ணங்களில் ஜொலிக்கிறது. மலைவாழ் மக்கள், இதைக் கண்டு, பள்ளியை வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.
அப்பள்ளியின் ஆசிரியர் அமுதனிடம் இதுபற்றி கேட்டபோது, “மலையில் இயங்கி வரும் இப்பள்ளி காமராஜர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. பழைய பள்ளி என்றாலும், பள்ளியின் சுற்றுப்புறச் சூழல் சரியில்லாததால், மாணவர்கள் சேர்க்கை குறைந்து கொண்டே போனது. இந்த நிலையில் தான் எங்கள் பள்ளியில் நிலைக் குறித்து அறிந்த புதுச்சேரியைச் சேர்ந்த ‘பெயின்ட் பாண்டிச்சேரி’ என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த மகேஷ் என்பவர் எங்களைத் தொடர்பு கொண்டார். பின்னர் அந்தகுழுவினர் எங்கள் பள்ளிக்கு வந்து, பள்ளிச் சூழலை மாற்றும் வகையில் பல வண்ணங்களில் வண்ணம் தீட்டி, பள்ளிக்கு புதுப்பொலிவை ஏற்படுத்தியுள்ளனர்” என்றார்.
இதையடுத்து, ‘பெயின்ட் பாண்டிச்சேரி’ அமைப்பைச் சேர்ந்த மகேஷிடம் பேசினோம். “எனது பெற்றோர் இருவரும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். நான் பொறியாளராக இருக்கிறேன். கிராமப் புற அரசுப் பள்ளிகள் போதிய பொலிவின்றி, பராமரிப்பின்றி காணப்படும். அதை மாற்ற வேண்டும் என்ற உந்துதலோடு எனது நண்பர்களாக உள்ள மருத்துவர்கள்,பொறியாளர்கள், தொழிலதிபர்கள் பங்களிப்புடன் பள்ளிகளுக்கு வண்ணம் தீட்டும் பணியை மேற்கொண்டு வருகிறோம். பல வண்ணங்களைத் தீட்டுவதோடு, ஓவியங்களையும் வரைந்து வருகிறோம்.
தமிழகத்தில் இதுவரை 38 பள்ளிகளை இதுபோல வண்ணமயமாக மாற்றியுள்ளோம். ‘இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இது மன மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது’ என ஆசிரியர்கள் கூறுவது எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது“ என்கிறார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE