என் எண்ணத்தில் ஒரு மாற்றம். 'சுற்றுலாவுக்கான சுலோக வரிகளாக, ஆக இந்த வார்த்தை அல்லவா பொருந்தமாக இருக்கும்...' என்ற எண்ணம் வந்தது. உடனடியாக, கடிதத்தால், விலாச அட்டை, விளம்பரங்களில் 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்...' என்ற பாடல் வரியை இடம் பெறச் செய்தேன். இந்திய ஜனாதிபதியாக பதவி வகித்த, மறைந்த, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், ஐரோப்பிய யூனியன் பார்லிமென்ட்டில், ஆங்கிலத்தில் உரையாடியதை, 'யூ டியூபில்' பார்த்தேன்.
சபைக்கு வணக்கம் தெரிவித்து, அவர் பேசிய முதல் வரியே, 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்!' 'எல்லா ஊர்களும் எமது ஊர், நாம் அனைவரும் உறவினர். எந்த பேதமும் மனிதர்களிடயேயும், நாடுகளிடையேயும் இருக்கக் கூடாது எனும் பண்பாட்டை, உலகிற்கே சொல்லி இருக்கிறார், எங்கள் நாட்டுப்புலவர் கணியன் பூங்குன்றனார்...' என்றார்.
அவர் பேச்சை கேட்க கேட்க, எனக்குள் பரவசம்.இதோ அந்தப் பாடலும், அதன் அர்த்தமும்... 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்'பொருள்: எல்லா ஊரும் என் ஊர். எல்லா மக்களும் எனக்கு உறவினர் என்று நினைத்து, அன்பே வாழ்வின் அடிப்படை, ஆதாரம் என்று வாழ்ந்தால், இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது, சுகமானது.'தீதும் நன்றும் பிறர்தர வாரா'பொருள்: தீமையும், நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை எனும் உண்மையை உணர்ந்தால், சக மனிதர்களிடம் வெறுப்பு இல்லா ஒரு சம நிலை சார்ந்த வாழ்வு கிட்டும்.
'நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன'பொருள்: துன்பமும், ஆறுதலும் கூட மற்றவர் தருவதில்லை. மனம் பக்குவப்பட்டால், அமைதி அங்கேயே கிட்டும்.'சாதலும் புதுவது அன்றே'பொருள்: பிறந்தநாள் ஒன்று உண்டெனில், இறக்கும் நாளும் ஒன்று உண்டு. இறப்பு புதியதல்ல. அது இயற்கையானது; எல்லாருக்கும் பொதுவானது. இந்த உண்மையை உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால், எதற்கும் அஞ்சாமல் வாழ்க்கையை வாழும் வரை ரசிக்கலாம்.
'வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே,முனிவின் இன்னாது என்றலும் இலமே'
பொருள்: இந்த வாழ்க்கையில் எது, எவருக்கு, எப்போது, என்ன ஆகும் என்று எவருக்கும் தெரியாது. இந்த வாழ்க்கை மிகவும் நிலையற்றது. அதனால், இன்பம் வந்தால் மிக்க மகிழ்வதும் வேண்டாம்; துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம். வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து, இயல்பாய் வாழ்வோம்.
'மின்னோரு வானம்தண்துளி தலைஇ ஆனாதுகல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்றுநீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம்'
பொருள்: இந்த வானம் நெருப்பாய், மின்னலையும் தருகிறது. நாம் வாழ மழையையும் தருகிறது. இயற்கை வழியில், அது அது அதன் பணியைச் செய்கிறது. ஆற்று வெள்ளத்தில், கற்களோடு, அடித்து முட்டி செல்லும் படகு போல, வாழ்க்கையும் அதன் வழியில் அடிபட்டுப் போய்க் கொண்டிருக்கும். 'இது இயல்பு...' என, மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்.
'ஆதலின் மாட்சியின் பெயோரை வியத்தலும் இலமே,சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே'
பொருள்: இந்தத் தெளிவு பெற்றால், பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பார்த்து, மிகவும் வியந்து பாராட்டவும் வேண்டாம். சிறிய நிலையில் உள்ள சிறியவர்களைப் பார்த்து, ஏளனம் செய்து இகழ்வதும் வேண்டாம். அவரவர் வாழ்வு அவரவர்க்கு அவற்றில் அவரவர்கள் பெரியவர்கள்.
இதை விட, வேறு எளிமையாக, எவர் வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித் தர முடியும்!புலவர் கணியன் பூங்குன்றனார் எங்கே பிறந்தார், வளர்ந்தார் என்ற ஆர்வம் என்னுள் எழுந்தது.
அவர் பிறந்த ஊர் மகிபாலன்பட்டி, சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் என, அறிய முடிந்தது. அங்கே சென்றேன்.ஏப்., 30, 1974ல் கணியன் பூங்குன்றனார் நினைவு சின்னத்தை, அப்போதைய முதல்வர் கருணாநிதி எழுப்பி இருக்கிறார். இதைத் தவிர வேறொரு சிறப்பும் அங்கே காணப்படவில்லை. வேறு எந்த முன்னேற்றமும் இவர் விஷயத்தில் நடக்கவில்லை. கணியன் பூங்குன்றனாருக்கு சிலை வைக்கப்படாமல் போனது ஏன் என, இன்னும் விடை தெரியாமலிருக்கிறது.
உண்மையில், அவர் ஊருக்குத் தேவை:
*பிரதான சாலையிலிருந்து ஊருக்குள் வரும் பாதையில் ஓர் அலங்கார வளைவு
*அந்த அலங்கார வளைவிலிருந்து குகைக் கோவில் அமைவிடம் பாறை வரையிலும், 20 அடி அகலத்தில் ஒரு தார் சாலை
* வீதியின் இருபுறமும் தெருவிளக்குகள்
* இருபக்க நடைபாதையோடு எங்கும் நல்ல நிழல் தரும் மரங்கள்l கோவில் அமைந்திருக்கும் அமைவிடத்தில் இருக்கக் கூடிய, இரண்டு குன்றுகளைச் சுற்றியும் புறம் போக்கு நிலங்களை குறைந்த பட்சம், 15 ஏக்கர் நிலத்தை சுற்றி வேலி
* குன்றைச் சுற்றி இருக்கும் மணல் பிரதேசங்களை சுத்திகரித்து பழ மரங்கள், பூ மரங்கள் நடல்
* குன்றுகளிலோ, அது சார்ந்த பிரதேசங்களிலோ, எந்த சிமென்ட் கட்டடமும் கட்டப்படக் கூடாது. பழமை மாறாது, கணியன் பூங்குன்றனார் அமர்ந்து 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' எனும் வார்த்தையை எழுதிய அந்த இடத்தை பாதுகாத்து, பராமரிக்க வேண்டும்.
ஆசியாவிலேயே மிகப் பெரிய மாநாடு மண்டபத்தை, சென்னையைத் தாண்டிக் கட்டி, அதற்கு, கணியன் பூங்குன்றனார் நினைவு மண்டபம் எனப் பெயரிட்டு, செம்மையாகப் பராமரிக்க வேண்டும்.
உலக நாடுகளில் இருக்கக் கூடிய பலவேறு கருத்தரங்குகள், கண்காட்சிகள், பிலிம் பெஸ்டிவல், திருமணங்கள் நடந்தால், 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' எனும் ஒற்றை வார்த்தை, உலகெங்கும் எதிரொலிக்கும்.
'கலைமாமணி' வீ.கே.டி.பாலன்,
தலைவர், தமிழ்நாடு சுற்றுலா பயண மற்றும் விருந்தோம்பல் சங்கம்,
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE