Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

14 November 2020

கேட்ட வரம் அருளும் கேதார கவுரி விரதம்



கேதார கவுரி விரதம் பொதுவாக, 21 நாள் அனுசரிக்க வேண்டிய விரதம். புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமி திதியில் தொடங்கி, ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் அமாவாசை வரைக்கும் தொடரும் விரதம் இது.


கேட்ட வரம் அருளும் கேதார கவுரி விரதம்

கயிலாயத்தில் பரமசிவனும், பார்வதியும் வீற்றிருந்தனர். பிரம்மா, விஷ்ணு முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும் அனுதினமும் சிவனையும், பார்வதியையும் வலம் வந்து வணங்கிச் செல்வார்கள். ஆனால் பிருங்கி என்ற பெயருடைய முனிவர் மட்டும், பார்வதியை விடுத்து சிவபெருமானை மட்டும் வலம் வந்து வணங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் கோபம் கொண்ட பார்வதிதேவி, இதுபற்றி சிவபெருமானிடம் கேட்டாள்.

அதற்கு சிவபெருமான், “பிருங்கி முனிவருக்கு, பாக்கியங்கள் எதுவும் தேவையில்லை. அவர் மோட்சத்தை மட்டுமே விரும்புகிறார். எனவேதான் என்னை மட்டும் சுற்றி வந்து வழிபடுகிறார்” என்றார்.


உடனே பார்வதி, பிருங்கி முனிவரைப் பார்த்து “முனியே.. உன்னுடைய தேகத்தில் ஓடும் ரத்தம், தசை, நரம்புகள் உள்ளிட்ட சக்திக்குரிய அனைத்தும் நான் வழங்கியவை. அதனை எனக்குத் திருப்பிக்கொடு” என்றாள். பிருங்கி முனிவர் அப்படியேச் செய்தார். இதனால் அவர் எலும்பும், தோலும் மட்டும் கொண்டவராக வலுவிழந்து தடுமாறினார். அப்போது சிவபெருமான், பிருங்கி ரிஷியினை நோக்கி, ‘நீ பார்வதி தேவி யினை விட்டு என்னை நமஸ்கரித்ததால் அன்னை உனக்கு இந்த தண்டனை அளித்தாள்’ எனக் கூறி ஒரு கைத்தடி ஒன்றினைக் கொடுத்தார்.

இதைக்கண்டு சிவன் மீது கோபமடைந்த பார்வதி, கயிலாயத்தை விட்டு பூவுலகிற்கு வந்தாள். ஒரு நந்தவனத்தில் இருந்த ஒரு மரத்தின் அடியில் எழுந்து அருளினாள். அந்தப் பகுதியானது 12 ஆண்டுகள் மழையின்றி வறண்டு கிடந்தது. பார்வதி தேவி வந்ததும், மழை பெய்தது. அங்கிருந்த செடி, கொடி, மரங்கள் அனைத்தும் புத்துயிர் பெற்றன. பல அரிய பூக்களின் வாசத்தை நுகர்ந்து, அங்கு வந்தார் வால்மீகி முனிவர். அவர் அம்பிகையை வழிபட்டு, தன்னுடைய ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார்.

அப்போது பார்வதி தேவி, “முனிவரே.. நான் மீண்டும் ஈசனுடன் சேருவதற்கு, இந்த பூலோகத்தில் மிக மேலான ஒரு விரதத்தினை நான் ஏற்று செய்ய வேண்டும். அப்படியொரு விரதத்தைப் பற்றி கூறுங்கள்” என்று கேட்டாள்.

“இந்த பூலோகத்தில் ஒருவரும் அறியாத ஒரு விரதமுண்டு. அந்த விரதத்திற்கு ‘கேதாரீஸ்வரர் நோன்பு’ என்று பெயர். அந்த விரதத்தினை அனுஷ்டித்தால் நீங்கள் நினைத்தது நடக்கும்” என்றார், வால்மீகி முனிவர்.

அதன்படி அம்பிகை, அந்த விரதத்தை முறை தவறாமல் கடைப்பிடித்தாள். இதையடுத்து விரதத்தின் 21-ம் நாள் அன்று, தேவ கணங்கள் சூழ அம்பிகைக்கு சிவபெருமான் காட்சி அளித்தார். அதோடு தனது இட பாகத்தினை அம்பிகைக்கு அளித்து, அர்த்தநாரீஸ்வரராக கயிலாயம் சென்றார். அம்பிகையே விரதம் இருந்த காரணத்தால், இது ‘கேதார கவுரி விரதம்’ என்று அழைக்கப்படுகிறது.

விரதம் இருக்கும் முறை

கேதார கவுரி விரதம் பொதுவாக, 21 நாள் அனுசரிக்க வேண்டிய விரதம். புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமி திதியில் தொடங்கி, ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் அமாவாசை வரைக்கும் தொடரும் விரதம் இது. தினமும் காலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து, சிவ பூஜை செய்ய வேண்டும். நோன்பின் முதல் நாள் அன்று 21 நூல் கொண்டு 21 முடிச்சுகளால் கலசத்தினை சுற்றி அமைப்பர். இக்கலசமே சிவ-பார்வதியாக வழிபடப்படுகின்றது. இந்த விரதம் இருப்பவர்கள், தினமும் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் நைவேத்தியம் வைத்து அதனையே பிரசாதமாக உண்பார்கள். 21-ம் நாள் அன்று 21 அதிரசம், 21 வாழைப்பழம், 21 மஞ்சள், 21 வெற்றிலை, 21 கொட்டை பாக்கு, தேங்காய், சந்தனம், பூக்கள் வைத்து வழிபடுவர். 21 வகை காய்கறிகள் கொண்டு உணவினை சமைத்து உற்றார், சுற்றார் சூழ சாப்பிட்டு விரதத்தினை முடிப்பர்.

இது பெண்களுக்கு மிகச் சிறப்பான விரத பூஜையாகும். இப்பூஜை அவரவர் குடும்ப வழக்கப்படி சற்று மாறுபடும். அவரவர் பெரியோர்களிடம் கேட்டு அறிந்து அவர்கள் மூலம் எடுத்துச் செய்வது நல்லது. ஐப்பசி அமாவாசை அன்று செய்யும் பூஜையில் முடிந்தால் தங்கம் (நகை) சாத்தி, பட்டு வஸ்திரம் சுற்றி பூவால் அலங்கரித்து சந்தன குங்குமம் இட வேண்டும். விளக்கேற்றி வைக்க வேண்டும். மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்து அருகம்புல், பூ சுற்றி, மஞ்சள் குங்குமம் இட்டு விநாயகரை அர்ச்சிக்க வேண்டும். அதோடு இறைவனின் 16 நாமங் களைச் சொல்லி தூப தீப ஆராதனை செய்து நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

பின்னர் அம்மி குழவியை நன்கு சுத்தம் செய்து பலவித அலங்காரங்களை அதற்கும் செய்து வில்வம், தும்பை போன்ற விசேஷ இலை, பூக்களையும் சேர்த்து சிவ நாமம் செய்து பூஜிக்க வேண்டும். தூப, தீப ஆராதனைகள் நைவேத்தியம் வைத்து அட்சதை போட்டு வணங்கி, வீட்டில் உள்ள பெரியவர்கள் மூலம் நோன்பு கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் நோன்பு கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். வருவோருக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், 21-வது நாள் ஈஸ்வரன் காட்சி அளித்து வேண்டிய வரம் அளிப்பார் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES