கல்லூரிகள் திறப்புக்குப் பிறகு விடுதிகளில் ஓர் அறைக்கு ஒரு மாணவரை மட்டுமே தங்க வைக்க வேண்டும் என்று யுஜிசி கட்டுப்பாடு விதித்துள்ளது. இது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் உயர் கல்வித்துறை குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.
கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து அனைத்துக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களை நவ.16-ம் தேதி திறக்கலாம் என்று அண்மையில் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. எனினும் பண்டிகைக் காலம் மற்றும் பருவமழைக் காலம் என்பதால் கரோனா தொற்று அதிகரிக்கலாம் எனப் பல்வேறு தரப்பினரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
கரோனா தளர்வுகளின்படி நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைத் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி அண்மையில் வெளியிட்டது. அதில், 'முறையான பாதுகாப்பு மற்றும் உடல்நல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி விடுதிகளைத் திறக்கலாம்.
எனினும் விடுதிகளில் அறைகளைப் பகிர்ந்து கொள்ள அனுமதியில்லை. தொற்று அறிகுறி கொண்ட மாணவர்களுக்கு எக்காரணம் கொண்டும் விடுதிகளில் அனுமதி கிடையாது. வெவ்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரிக்கு வரும் விடுதி மாணவர்களுக்குக் கரோனா இல்லை என்றாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதன்பிறகே வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்'' என்பன உள்ளிட்ட விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக விடுதிகளில் அறைகளைப் பகிர்ந்து கொள்ள அனுமதியில்லை என்று கூறப்பட்டிருப்பதால் ஓர் அறைக்கு ஒரு மாணவரை மட்டுமே தங்க வைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் தமிழக உயர் கல்வித்துறை குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.
இதற்கிடையே நவம்பர் 16-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா என்பது குறித்த இறுதி முடிவு நவ.12-ம் தேதி எடுக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE