கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். அந்த ராஜகோபுரத்தை கட்டியவனுக்காக ஆரவாமுதன் வேறொரு கடனை நிறைவேற்றினான். அது என்ன கடனென்று ராஜகோபுரத்தைக் கடந்து சென்று கொண்டிருந்த கோயிலில் பணியாற்றும் பட்டாச்சார்யாரிடம் கேட்டபோது கண்களை மூடிக் கொண்டார். கோபுரத்து மாடங்களில் புறாக்கள் கூட்டமாக அமர்ந்திருந்தன. மெல்ல சிரித்து சொல்லத் தொடங்கினார். ‘‘ஆரவாமுதன். உச்சரிக்கும் போதே உள்ளத்தில் அமுதூறும் அழகான திருப்பெயர். ஆதலாலே ‘‘ஆரா அமுதன் எனும் நாமமே இப்படி மயக்குவிக்கிறதே. தொண்டையில் சிக்கிக் கொண்ட பிரதிமையைப்போல் எனக்குள் மையம் கொண்டாயோ’’ என ஆழ்வார்கள் உன்மத்த அவஸ்தையில் திளைத்த திவ்யதேசமே, கும்பகோணம் சார்ங்கபாணி பெருமாள் கோயில்.
எல்லோரும் தீபாவளியன்று பெருமாளை கொண்டாடுவர். நரகாசுரனை வதம் செய்த நாளன்று நரக சதுர்த்தி என மாலவனாம் கிருஷ்ணனை ஆராதிப்பர். ஆனால், கும்பகோணம் சார்ங்கபாணி எனும் ஆராவமுதன் தானே மகனாய், தந்தையாய், பரம்பரையில் ஒருவனாக அமர்ந்து சிராத்தம் எனும் திதி செய்தான். அதுவும் ஊர் கூடி தீபாவளியில் களித்திருக்க உள்ளம் கனிந்து ஒரு அடியவனுக்காக திவச அன்னம் கொடுத்து ஆற்றுப்படுத்தினான், ஆரவாமுதன். அது யதேச்சையாக ஐப்பசியும், தீபாவளியும், அமாவாசையும் ஒன்றாக சங்கமிக்கும் நாளில் நிகழ்ந்தது.அது நாயக்கர்களின் காலம். தென் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர். காஞ்சிக்கும், வந்தவாசிக்கும் அருகேயுள்ள நாவல்பாக்கம் எனும் தலத்தில் அய்யா குமாரதாதா தேசிகன் எனும் மகான் வளர்ந்து கொண்டிருந்தார். முக்காலமும் வேதத்தை ஓதினார். கற்றதை பிறருக்கு கற்றுக் கொடுத்தார். வேள்விகள் செய்து நாட்டின் வளத்தை பெருக்கினார். ஞானத் தாகத்தோடு அருகே நின்றவர்களுக்கு பாசுரங்களையே தீர்த்தமாகக் கொடுத்தார். தாகம் தணிந்து சாந்தமுற்றோர்களை நாலா திக்கும் அனுப்பினார். வைகுந்தனின் வாசத்தை விண்ணுலகம் வரை பரப்புங்கள் என பயணிக்க பாதை காட்டினார்.
அச்சுதப்ப நாயக்கர் இவரின் அருட்பெருமையை அறிந்தார். ‘‘உங்களின் திருவடி என்றும் என் சிரசில்’’ என பணிந்து வணங்கினான். எங்களின் எல்லா தலைமுறைக்கும் தாங்களே குருவாக இருத்தல் வேண்டும் என வேண்டினான். ‘‘திருமலை பெருமாளின் சித்தம் அதுவெனில் ஏற்கிறேன்’’ என ஆசி கூறினார். ஞான ஊற்றொன்று மெல்ல பொங்கியது. அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் என மூன்று தலைமுறையையும் அருளால் நனைத்தது.பாத்திரா பாத்திரம் பார்க்காது நிறைக்கும் அட்சய பாத்திரம் எங்கோ குருவருளை வேண்டி ஒரு ஜீவன் நிற்பதை அகக் கண்ணில் கண்டது. அதுவும் இவர் வருவாரா என காத்துக் கிடந்தது. குடந்தை சார்ங்கபாணி கோயில் வாயிலில் ஒரு பக்தன் கண்களில் நீர் துளிர்க்க வானம் பார்த்துக் கொண்டிருந்தான். முழங்கால் அளவு வேட்டி. இடுப்பில் ஒரு துண்டு. கட்டுக் குடுமியும், நெற்றி நிறைய திருமண்ணோடும் நின்றிருந்தான். ‘‘என்னடா பார்க்கற. யாராவது மேல போறாளா’’ விஷமமாக சில இளைஞர்கள் லஷ்மி நாராயணன் எனும் அந்த பிரம்மச்சாரியை சீண்டினார்கள்.‘‘ஆமா... என்னிக்காவது ஒருநாள் வானம் முட்டற கோபுரம் பெருமாளுக்கு எப்போ வரும்னும் பார்க்கறேன். ராஜா மட்டும் மாளிகைல உசரமா இருக்கார். நம்ம சாரங்க ராஜாக்கு மட்டும் மொட்டை கோபுரமா. வரட்டும் கேட்கறேன்.’’ விளக்கம் சொன்னான்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE