பழைய அரசாணையை காரணம் காட்டி, அரசு உதவி பெறும் பள்ளிகளில், புதிய நியமனத்திற்கு ஒப்புதல் வழங்காததால், பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுக்க, மாணவர் சேர்க்கை சரிந்ததால், உபரியாக உள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்காக, உதவி பெறும் பள்ளிகளில், புதிய நியமனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்காக, முதன்மைச் செயலராக இருந்த பிரதீப் யாதவ், 2019 செப்., மாதம், அரசாணை வெளியிட்டார். இந்த உத்தரவுக்கு முன்பே, பல உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்களை நியமிக்க, கல்வித் துறையில் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால், அரசாணையை காரணம் காட்டி, நியமன ஒப்புதல் பெற்றவர்களுக்கு, பணி ஆணை வழங்காமல் இழுபறி நீடிக்கிறது.
தற்போது, அரசு பள்ளிகளை விட, உதவி பெறும் பள்ளிகளில், சேர்க்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. புதிய ஆசிரியர்களை நியமிக்காவிடில், கற்பித்தல் பணிகள் தேக்கம்அடையும் என்ற புகார் எழுந்துள்ளது.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தணிக்கையாளர் அருளானந்தம் கூறியதாவது: அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப, நிர்வாகிகளுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதிக மாணவர்கள் சேர்ந்து உள்ள பள்ளிகளில், ஊழியர்களை நியமிக்க ஒப்புதல் வழங்க, அரசாணையை திருத்தம் செய்ய வேண்டும்.
ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது குறைக்கப்பட்டுள்ள நிலையில், அரசாணையை திருத்துவதில் தாமதம் நீடித்தால், நிரந்தர பணிக்காக காத்திருக்கும் பட்டதாரிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE